* ரேடாரின் கண்களில் சிக்காதபடி விசேஷ பெயின்ட் பூசப்பட்டவை இந்த ஹெலிகாப்டர்கள். வால்பக்கம் இருக்கும் மோட்டார்களும் ஸ்பெஷலாக செய்யப்பட்டவை என்பதால் அதிக சத்தம் கேட்காது. அதோடு, பாகிஸ்தான் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, மிகத் தாழ்வாக, கிட்டத்தட்ட மரங்களுக்கு சற்று மேலாகவே பறந்து வந்தன இவை. 250 கி.மீ. தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் வந்தடைந்தன.
* பின் லேடன் வீட்டுத் தோட்டத்தில் இறங்க முயன்றது முதல் ஹெலிகாப்டர். அப்போது அதன் வால்பகுதி காம்பவுண்ட் சுவரில் உரச, வால் காற்றாடி செயலிழந்தது. சாமர்த்தியமாக பைலட் தரையிறக்கியதால், வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை. இரண்டாவது ஹெலிகாப்டர் மூலம் மொட்டை மாடியில் சில வீரர்களை இறக்குவதாக பிளான். ஆனால் முதலில் இறங்கிய ஹெலிகாப்டர் சொதப்பியதால், இந்த பிளான் மாற்றப்பட்டது. தூரத்து வயல்வெளியில் அது இறங்கியது.

* முதலில் தடுமாறி இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து 3 வீரர்கள் குதித்து இறங்கி வீட்டுக்குள் ஓடினர். அவுட் ஹவுஸில் வசித்த பின் லேடனின் கூரியர் குவைதி சத்தம் கேட்டு எழ, இரண்டு புல்லட்கள் அவனை சாகடித்தன. அவன் மனைவியை தோளில் சுட்டு காயப்படுத்தினர். குவைதியிடம் ஏ.கே.47 இருந்தது. ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை. அதன்பின் அவுட் ஹவுஸில் நுழைந்தவர்கள், வீட்டின் தரைதளத்தில் இருந்த குவைதியின் சகோதரன் அப்ராரையும், அவனது மனைவி புஷ்ராவையும் கொன்றனர். நவீன சைலன்ஸர் பொருத்தியிருந்ததால், துளிகூட சத்தம் இல்லை.
* இதற்குள் மற்ற சீல்ஸ் வீரர்கள் பின் லேடன் பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து, ஆங்காங்கே இருந்த கதவுகளை குண்டு வைத்துத் தகர்த்தனர்.
* சீல்ஸ் வீரர்களின் ஹெல்மெட்டில் இருந்த கேமராக்கள் உடனுக்குடன் தாக்குதல் காட்சிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. பின் லேடனின் வீட்டுக்கு நேர் மேலே 2 மைல் உயரத்தில், வௌவால் வடிவத்தில் ஒரு ஆளில்லா உளவு விமானம் பறந்து கொண்டிருந்தது. அது தாக்குதல் காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்தது. வெள்ளை மாளிகையில் இருந்தபடி அதிபர் ஒபாமாவும் மற்றவர்களும் இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
























