இந்தியாவின் ஜனநாயகம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் V-Dem ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஐ.நா. பொதுச்சபை (UNGA), அமெரிக்க நாடாளுமன்றம் (US Congress) மற்றும் செங்கோட்டை மேடைகளில் நின்று “இந்தியா ஜனநாயகத்தின் தாய்” (Mother of Democracy) என்று முழங்கிய பிரதமர் மோடி அவர்களே, இதோ உங்கள் ஆட்சியின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது சர்வதேச வி-டெம் (V-Dem) நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை! கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய ஜனநாயகத்தை அதலபாதாள வீழ்ச்சிக்குத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.

179 நாடுகள் கொண்ட ஜனநாயகக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 106-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, வெறும் 0.38 புள்ளிகளுடன் உலக அரங்கில் தலைகுனிவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி உரிமை பறிக்கப்பட்டு, நியாயமான தேர்தல் நடைமுறைகளும், சிறுபான்மையினர் உள்ளிட்ட வாக்காளர்களின் உரிமைகளும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுவதை ஐ.நா. அமைப்பும் (UN CERD) சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அலட்சியம் செய்வது, நீதித்துறையின் நம்பகத்தன்மையைச் சீர்குலைப்பது, அரசு தணிக்கை மூலம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தொடர் அச்சுறுத்தல்கள் என ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களையும் பாஜக அரசு தகர்த்துவிட்டது.
























