பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 கட்டங்களாகவும் அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் 2 கட்டங்களாகவும், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது.

நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்:

88 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் ஒரு சில பகுதிகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மக்களவையின் 15 சட்டப்பேரவை தொகுதிகளில் 19.04.2024 (முதல் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும். 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26.04.2024 (இரண்டாம் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும்.

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்க உள்ளது.

12 மாநிலங்களில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும்.

மே மாதம் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் மே மாதம் 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் மே மாதம் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. 6ஆம் கட்ட மக்களவை தேர்தல் மே மாதம் 25ஆம் தேதியும் கடைசி கட்டமான 7ஆம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது.