Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் ‘பரிமளா ஃபேமிலி’ பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

பரிமளாவின் இளைய மகளான மதுமிதாவுக்கு, ஏரியா லோக்கல் டான் வர்க்கீஸ் (சாண்டி) காதல் டார்ச்சர் தருகிறார். இதனால் டென்ஷனாகும் ‘பரிமளா & கோ’-வின் உறுப்பினர்கள் அனைவரும் வர்க்கீஸைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

வர்க்கீஸைக் கொன்றுவிட்டால் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடும் எனவும் நினைக்கிறார்கள். இவர்கள் இப்படி நினைத்த அடுத்த நாளே வர்க்கீஸ் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையைச் செய்தவர் நம் குடும்பத்து உறுப்பினர்களில் யாரோ ஒருவர்தான் என்கிற சந்தேகம் பரிமளா ஃபேமிலியிலுள்ள அனைவருக்கும் எழுகிறது.

உண்மையாகவே இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதை அலசுவதே இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்தக் காமெடி படத்தின் கதை.

அனைத்துக் கதாபாத்திரங்களையும் காமிக்கல் வடிவிலேயே வடிவமைத்திருக்கிறார்கள். குடும்பத் தலைவனாக லேசாக முறுக்கிவிட்ட ‘கேட்’ மீசையுடன் வரும் ஜெயராம், பதற்றம், பயம், சமாளிப்புகள் என நடிப்பில் காமெடி பெயிண்ட் பூசி காட்சிகளை ‘கலகல’-வென மாற்றியிருக்கிறார்.

வீட்டில் பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் அம்மா கதாபாத்திரத்தில் ஊர்வசி. அப்பாவித்தனமான முகபாவனையை வைத்துக் கொண்டு இவர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே படத்திற்குப் பலம் சேர்த்திருக்கின்றன. ஆனாலும் உருவக்கேலி காமெடிகளைத் தவிர்த்திருக்கலாமே?!

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்
Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

மகள்களாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் பங்குபோட்டு அவரவர் பங்களிப்பை நடிப்பில் குறையின்றித் தந்திருக்கிறார்கள். ஆனால், அனந்திகா சனில்குமாரின் நடிப்பில் ஆங்காங்கே செயற்கைத்தனங்கள் கண்ணாமூச்சி ஆடுவது ஏனோ! அதோடு வசன உச்சரிப்பிலும், அதைப்பேசும் தொனியிலும் அவர் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.

வெறுப்பூட்டும் ஸ்டாக்கிங் இளைஞன் கதாபாத்திரத்தில் சாண்டியின் நடிப்பில் குறையேதுமில்லை. ஹாரர் ஒப்பனையில் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் மட்டும் ‘எங்கேயோ பார்த்திருக்கேன்’ உணர்வைத் தருகிறது. கறார் காவல் அதிகாரி, ‘பரபர’ தீவிரத்தோடு வழக்கைக் கையாள்வது, அவருக்குள் இருக்கும் வலி என நடிப்பில் பன்முகம் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார் மிஷ்கின்.

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்
Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு சீரியஸான தொனியிலேயே ஆங்காங்கே இவர் தூவிவிட்டுப் போகும் காமெடிகள், திரையரங்கில் சிரிப்பு ஒலிகளை உண்டாக்குகின்றன. யோகி பாபுவுக்கென அளவெடுத்துத் தைக்கப்பட்ட வழக்கமான கதாபாத்திரத்தில் அவர் வந்து போகிறார். ஆனால், அதன் டிசைனில் சுவாரஸ்யமில்லை! இவர்களைத் தாண்டி பகவதி பெருமாள், சிங்கம் புலி, சந்தோஷ் சோபன், சென்றாயன் ஆகியோருக்கு மனதில் தங்குமளவிற்குக் கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை.

பரிமளாவின் வீடு, பட்டினப்பாக்கம் கடற்கரை என ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் இந்த சினிமாவுக்குக் கச்சிதமான பணியை நல்கியிருக்கிறார். முதல் பாதியில் காட்சிகளைக் கோர்வையாகக் கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், இரண்டாம் பாதியில் மட்டும் ஏனோ கோணலாகவே கத்திரி போட்டிருக்கிறார்.

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்
Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

ஃபாக்ஸன் குழுவினர் இசையில் ‘வாட்சா வுடாதா’ பாடல் நல்ல வைப் நம்பர்! ஆனால், அந்த ஒரு நிமிடப் பாடலும் சீரியஸ் கதைக்கு பேரிகேட்டை இழுத்துப் போடுகிறது. காமெடி மற்றும் சீரியஸ் களத்துக்கு ஏற்ற பின்னணி இசை ஓகே!

பரிமளா ஃபேமிலியைத் தொந்தரவு செய்த வர்க்கீஸின் கொலையைச் செய்தது யார் என்கிற கேள்விக்கு விடை தேடும் த்ரில்லர் கதையை காமெடி என்கிற துடுப்பு போட்டு நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பரிமளா ஃபேமிலியின் உறுப்பினர்கள் எப்படியானவர்கள் என்கிற விளக்கத்தைத் தந்தபடி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை என உடனடியாகவே கதைக்குள் காலடி எடுத்து வைக்கிறது படம். காமிக்கல் தன்மைகொண்ட கதாபாத்திரங்கள், அவர்கள் சிக்கல்களைச் சமாளிக்கும் விதம் போன்றவை சிரிப்பு பண்பலையைச் சரியாகக் கவனித்துக் கொள்வதோடு, நம்மையும் ‘ஹோல்ட் ஆன்’ செய்கிறது.

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்
Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

ஆனால், வர்க்கீஸின் கொலைக்குப் பிறகான த்ரில்லர் கதையில் இறுக்கமான கதையமைப்போ, பரபரப்போ இல்லாமல் நம்மை ‘ஃப்ரீ வே’ ரூட்டுக்கு மாற்றிவிடுகிறது திரைக்கதை. இதற்கிடையே, ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் ஆபத்பாந்தவனாகத் திரைக்கதையைக் காப்பாற்றுகிறது. இப்படியாகப் பாதி கிணற்றைத் தாண்டும் படம், கதையின் ஜானருக்குச் சம்பந்தமில்லாத வகையில் ‘இடைவேளை’ என்கிறது. இரண்டாம் பாதியில் வெகு தீவிரமாகத் த்ரில்லர் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு விசாரணைக்குக் கிளம்புகிறது. துருத்தலாக நீளும் கதாபாத்திரங்கள், பல கேள்விக்கு விடை தராமலேயே அந்தந்த கதாபாத்திரங்களை முடித்திருப்பது, திசை மாறிக்கொண்டே இருக்கும் விசாரணை போன்றவை இரண்டாம் பாதியை ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

கிளைமாக்ஸில் ‘போதை ஒழிப்பு’ பற்றிப் பேசியிருக்கும் நோக்கத்திற்குப் பாராட்டுகள். ஆனால், அதனை இறுதியாகக் கரை சேர்த்த விதமும், அதற்கென அடுத்தடுத்துக் கிளைக் கதைகளை விரித்திருப்பதும் ‘க்ளிஷே’ முடிச்சு பாஸ்! மிஷ்கின் உட்பட வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஆளுக்கு ஐந்து ட்விஸ்ட்டுடன் க்ளைமாக்ஸில் கபடி ஆடியிருக்கின்றனர். இதனால், படத்தின் முக்கிய ட்விஸ்ட்டும் பெரிய தாக்கத்தை உண்டாக்காமல் ‘ஸ்கிப்பிங்’ போட்டுச் செல்கிறது.

Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்
Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம்

இதோடு, மதுமிதா உண்மையாகவே வர்க்கீஸைக் காதலித்தாரா, சென்ராயன் எதற்கு வர்க்கீஸ் முன் நடிக்கிறார், கேரளாவிலிருக்கும் பரிமளாவின் உறவினர்களைக் காவல் அதிகாரிகள் கண்டடைவது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்குக் கடன் வைத்துவிட்டுப் போகிறது இந்த பரிமளா ஃபேமிலி. மிஷ்கின் கதாபாத்திரம் மூலம் இறுதியில் வரும் ட்விஸ்ட், கோடிட்ட இடங்களை நிரப்பும் வகையில் லாஜிக் ஓட்டைகளை வெறும் வசனங்களால் அவர் நிரப்பும் இடங்கள் போன்றவை ஏமாற்றமே!

ஆங்காங்கே வரும் காமெடிகள் தம்ப்ஸ் அப் காட்ட வைத்தாலும், த்ரில்லர் கதை இன்னும் அடர்த்தியாக இருந்திருந்தால் இந்த சினிமாவைத் தொடர்ந்து ‘வாட்சா’ விட்டிருக்கலாம்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed