புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி?
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்குப் பயிலச் சென்று வருகின்றனர்.
வழக்கம்போல கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தில் (தடம் எண்: 8) காலை நேரத்தில் பள்ளி மாணவிகளும், பயணிகளும் அதிகளவில் ஏறினர். பேருந்து “ரங்கம்மாள் சத்திரம்’ பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றியதும் கதவு மூடப்பட்டது. ஆனால், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் சிலர், “எங்களை இறக்கி விடுங்கள்” எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரம் மட்டுமே நகர்ந்த நிலையில், நடத்துநரின் தகவலின் பேரில் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார்.
அப்போது நடத்துநர் “இறங்குங்கள்” எனப் பயணிகளை இறக்கிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, கதவின் அருகே பேலன்ஸ் இல்லாமல் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கதவு திறக்கப்பட்ட அடுத்த கணமே, நிலைதடுமாறிய மாணவிகள் சீட்டுக்கட்டு சரிவது போல ஒருவர் மீது ஒருவராகச் சரசரவென சாலையில் தூக்கி வீசப்பட்டுச் சரிந்து விழுந்தனர்.
காயமடைந்த மாணவிகளின் விவரம்
கீழே விழுந்ததில் மாணவிகளுக்கு இடுப்பு, தொடை, நெஞ்சு மற்றும் கை, கால்களில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த 10 மாணவிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“கல்விப் பயணத்திற்கு அச்சத்தை உருவாக்கும்!” – சமூக ஆர்வலர் வேதனை
























