நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தில் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில், `2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்’ என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக பிரபல பிரதமர் வேட்பாளராக விஜய் 9.2% வாக்குகள் பெற்று நாட்டின் 3-வது தலைவராக உருவாகியிருக்கிறார்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்பிருந்தே த.வெ.க முகாமிலிருந்து `தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்’ என முதல்வர் விஜயை முன்வைத்து பேசிவந்தனர். இதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், “த.வெ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் ரசிக மனப்பான்மையிலிருது வெளியே வரவேண்டும்.” என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், “த.வெ.க ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வோம்.” என வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி பிரவின் சக்கரவர்த்தி உள்ளிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். வழக்கமாக நாடாளுமன்றக் குழுக்கள் துறை சார்ந்த அமைச்சர்களையே சந்திக்கும் நிலையில், இக்குழுவினர் நேரடியாக முதலமைச்சரைச் சந்தித்திருப்பது கவனம்பெற்றது.
குறிப்பாக ராகுல் காந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையே நல்ல நட்புறவைப் ஏற்படுத்தி, அதைப் பேணி வரும் பிரவின் சக்கரவர்த்தியும் இச்சந்திப்பில் பங்கேற்றதால், இது வெறும் அலுவலகச் சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணிக்குள் எழுந்துள்ள பிரதமர் வேட்பாளர் விவாதம் குறித்த பேச்சுவார்த்தையாகவும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் சாதக பாதகங்கள் குறித்து மூத்த ஊடகவியலாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.
அவர், “காங்கிரஸ் தி.மு.க-விடமிருந்து 27 தொகுதிகளைப் பெற்று, அதில் 5 தொகுதிகளில் மட்டும் வென்று, அதன் மூலம் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகை போன்றோர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் போன்றோரின் கருத்துகளைப் புறக்கணித்து இந்த முடிவுக்கு நகர்ந்தனர். இது தி.மு.க-வுக்குச் செய்த பச்சை துரோகம். அதனால், தி.மு.க காங்கிரஸுக்கான தன் கதவை இழுத்து மூடிவிட்டது.
காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் 4% நாடார்கள் தவிர, பெரியளவிலான ஓட்டுவங்கி கிடையாது. காங்கிரஸுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் சிதம்பரம், திருநாவுக்கரசு போன்ற தலைவர்களாலும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெல்ல முடியாது. அதேநேரம், எந்தக் கூட்டணியும் இல்லாமல் த.வெ.க தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வென்றிருக்கிறது.
எனவே, தற்போது த.வெ.க-வுக்கு காங்கிரஸ் தேவை என்பதைக் கடந்து, காங்கிரஸுக்கு விஜய் தேவை என்ற சூழலே நிலவுகிறது. அதனால், தற்போது காங்கிரஸ் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டது. இதன் காரணமாகவே, இப்போது த.வெ.க `ராகுகாந்திக்கு பிரதமராகும் திறன் இல்லை. முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்.’ என்ற அடிப்படையில் பேசத் தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் ராஜேஷ் குமார் போன்றோரின் பேச்சு இப்போது நடக்ககூடியதல்ல. 2029-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் தெரியும். அதுவரை நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது.
அதேப் போல, தேசியளவில் மம்தா பானர்ஜி, அரவிந்த கெஜ்ரிவால், பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத சூழல் ஏற்கனவே நிலவுகிறது. இந்த நிலையில், விஜயைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது ராகுல் காந்தியின் பிம்பத்திற்குப் பெரிய பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதன் அடிப்படையில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் விஜயை சந்தித்திருப்பது த.வெ.க-வுக்கே கூடுதல் பலமாக அமையும். 2029 மக்களவைத் தேர்தல் வரை விஜய் தன்னை ஒரு பிரதமர் முகமாகக் காட்டிக்கொள்வதைக் காங்கிரஸால் தடுக்க முடியாத கையறு நிலையே நீடிக்கும் எனக் கருதுகிறேன்.
த.வெ.க-வின் வருகை காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வின் பாரம்பரிய வாக்கு வங்கியான தலித், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்திருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத NDA கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் 53 இடங்களில் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸின் வாக்கு வங்கி சரிந்து, NDA கூட்டணி வெற்றி பெற்றதன் பின்னணியிலும் த.வெ.க பிரித்த வாக்குகளே காரணமாக இருக்கின்றன.

எனவே, த.வெ.க-வின் நகர்வு NDA கூட்டணிக்கு பெரும் சாதகமாக மாறும். எதிர்காலத்திலும் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் தலைமையிலான இக்கூட்டணி, பிற்படுத்தப்பட்ட மக்களின் (OBC) தொடர் ஆதரவைப் பெறும் பட்சத்தில், மேலும் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாநில அளவில் த.வெ.க தன்னை வலுப்படுத்திக் கொள்வது காங்கிரஸின் தேசிய பலத்தை மேலும் பலவீனப்படுத்தும்.
தற்போது காங்கிரஸ் 18 இடங்களிலிருந்து 5 இடங்களாகக் குறைந்திருப்பதும், புதுச்சேரி தோல்வியும் இதற்கு சான்றாகும். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போதுதான் இறுதி அரசியல் கூட்டணிகள் தெளிவடையும். அதுவரை விஜய் தன்னை ஒரு முதன்மை தலைவராகக் காட்டிக்கொள்வதும், ராகுலின் இமேஜ் சரிவைச் சந்திப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக தொடரும். எப்படிபார்த்தாலும், தவெக-வின் வளர்ச்சி காங்கிரஸின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும்.” என்றார்.
























