காங்கிரஸ் செய்த ஊழல்.. அம்பலப்படுத்திய ஜோதிமணி.. சிக்கலில் முக்கியப் புள்ளி? - Kumudam

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக கழன்றியது காங்கிரஸ். நம்முடன் இருந்து கொண்டே முதுகில் குத்துபவர்கள் காங்கிரஸ் கட்சியினர், நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல என்று காங்கிரஸ் குறித்து அந்த காலக்கட்டத்தில் கருணாநிதி வைத்த விமர்சனத்திற்கிணங்க, திமுகவிற்கு துரோகம் இழைத்தது காங்கிரஸ் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல், திமுக தலைமையும் காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டதோடு, இனி எந்த காலத்திலும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இப்படி, காங்கிரஸ் மீது திமுக கடும் விமர்சனங்களை வைத்துவரும் நிலையில், காங்கிரஸிற்கு எதிராக அக்கட்சியில் இருந்து ஒரு குரல் எழுந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி ஆன ஜோதிமணி தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன.

Jothimani X post

சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள்,வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.

தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகபெரிய பின்னடைவாக அமையும். இந்த நாட்டை பாஜக நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார். ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட,வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும்,வெளிப்படைத் தனமையோடும். கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜோதிமணியின் இந்த குற்றச்சாட்டு காங்கிரஸ் கதர்களை கதறச் செய்துள்ளதோடு, காங்கிரஸ் தலைமை இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed