முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று தவெக அமைச்சர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் இந்த முறையும் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காததும், நேற்று (செப்.9) செய்தியாளர் சந்திப்பில், ” காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொன்னாரா? அவர் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது.
சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முறையாக பதில் சொல்லவில்லை. மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனம். மூன்று கோப்புகள் கையில் இருப்பதாக முதல்வர் சொன்னார். ஏன் அதைப் பற்றி பேசவில்லை?” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தவெகவை சாடியிருந்ததும் அதிருப்தியில் இருக்கின்றனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்… என்ற கேள்வியை எழுப்புகிறது.
தவிர குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ போன்ற மாணவர்-இளைஞர் அமைப்புகளுக்குத் தடைகள் விதிக்கப்படுவதும் அவர்களுக்குக் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
























