உக்ரைன் மீது ரஷியாவும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களும் உலகில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொந்தளிப்பான சூழலில் உலக நாடுகள்:

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, உணர்ச்சிமிக்க, மொழியியல் ரீதியாக வேறுபட்ட விஷயங்களை வெளிநாட்டு அதிகாரிகளுடன் அரசு அதிகாரிகள் எப்படி அணுகுகிறார்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "ராஜங்க ரீதியான உறவில், வெவ்வேறு நாடுகள் தங்கள் சொந்த கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சில சமயங்களில் தங்கள் மொழி அல்லது கருத்துக்களை விவாதத்திற்கு கொண்டு வருகின்றன.

வித்தியாசமான பார்வைகள் இருப்பது இயற்கையே. ராஜதந்திரம் என்பது அதை சமரசம் செய்து ஒருவித உடன்பாட்டிற்கு வருவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதாகும். குழப்பம் இல்லாத போதும் சில சிக்கல்கள் வருவது உண்டு" என்றார்.

மனம் திறந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்:

இதை தொடர்ந்து, பயங்கரவாதம் குறித்து பேசிய மத்திய அமைச்சர், "எந்த மொழியில் சொன்னாலும், பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதம் போன்றவற்றை மன்னிக்கவோ அல்லது பாதுகாக்கவோ அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், பயங்கரவாதம் குறித்து அவர்கள் வேறு விளக்கத்தை தருகிறார்கள்.

வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கக்கூடிய இரண்டு தேசங்களுக்கு இடையே உண்மையாகவே சிக்கல்கள் இருக்கலாம். செய்த தவறுகளை மறைக்க நியாயம் கூட கற்பிக்கலாம். அந்த வித்தியாசத்தைக் கண்டறிந்து, அதை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் இந்தியா. எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. மனதில் பட்டதை பேசுவோம். நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால், நாட்டின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுப்போம்.

அதிகமான இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறுவதால், அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் கடினமான நிலையில் இருந்தால் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது, அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. கடந்த மூன்று மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட தேடல் பணிகளை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிக்க: Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?