நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அசைவம் சாப்பிடக் கூடாதா?

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் உணவு அரசியலை கையில் எடுத்துள்ளனர். ஆட்டிறைச்சி சாப்பிட்ட ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.

புனித மாதமாக கருதப்படும் சாவன் மாதத்தில் மட்டன் சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றின. மற்றவர்களின் உணவு பழக்கத்தில் பிரதமர் தலையிடுவதாக விமர்சனம் எழுந்தது.

சர்ச்சையை கிளப்பும் பாஜக தலைவர்கள்:

பிரதமர் மோடியை தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் டவுனில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து பேசிய ராஜ்நாத் சிங், "நவராத்திரியின் போது நீங்கள் மீன் சாப்பிடுகிறீர்கள். என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள்? மீன், பன்றி, புறா, யானை, குதிரை என எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால், அதை ஷோ காட்ட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

இது வாக்குகளுக்காக மட்டுமே. சமரச அரசியலுக்காக மட்டுமே. இதனால் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த மாதிரியான ஆட்களை கட்டுப்படுத்த வேண்டும் என லூலு பிரசாத் யாதவை கேட்டு கொள்கிறேன்" என்றார்.

மீன் சாப்பிட்ட வீடியோ?

லூலு பிரசாத் யாதவை தனது நண்பர் என குறிப்பிட்டு பேசிய ராஜ்நாத் சிங், "அவரது குடும்ப உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்? ஆட்சி அமைத்தால் மோடியை சிறையில் அடைத்துவிடுவோம் என்று சொல்கிறார்கள். சிறையில் இருப்பவர்களும் ஜாமீனிலும் இருப்பவர்களுமா மோடியை சிறைக்கு அனுப்புவார்கள்? பீகார் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால், இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.

சமீபத்தில், தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும்போது மீன் சாப்பிட்ட வீடியோவை லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். சைத்ரா நவராத்திரியின்போது அசைவம் சாப்பிடுவதா என பாஜகவினர், இதை சர்ச்சை ஆக்கியது குறிப்பிடத்தக்கது.