தொடர்ந்து 7வது முறை! இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 199வது இடத்தில் சென்னை

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து 7ஆவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தூய்மையான நகரங்களில் பட்டியலில் இந்தூரை தவிர்த்து குஜராத்தில் உள்ள சூரத் நகரமும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரங்கள்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ‘ஸ்வச் சர்வேக்சன் விருதுகள் 2023’- சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தையும், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

தூய்மையான நகரங்களை பொறுத்தவரையில், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிராவின் சாஸ்வாத் முதலிடத்திலும், சத்தீஸ்கரின் படான்  மற்றும் மகாராஷ்டிராவின் லோனாவாலா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் சிறந்த தூய்மையான கங்கை நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடம், பிரயாக்ராஜ் நகரத்துக்கு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மெள, நாட்டின் தூய்மையான கண்டோன்மென்ட் வாரியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  தூய்மையான நகரங்களில் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு நகரம் கூட தேர்வு செய்யப்படவில்லை. 112ஆவது இடத்தில் திருச்சியும் 199ஆவது இடத்தில் சென்னையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வச் சர்வேக்சன் கணக்கெடுப்பு முடிவுகள்:

கடந்தாண்டு, ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கங்கை நகரங்களில் பிஜ்னோர் முதல் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து, கன்னோஜ் மற்றும் கர்முக்தேஷ்வர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றன. கடந்தாண்டு பெரிய நகரங்கள் பிரிவில் இந்தூர் மற்றும் சூரத் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டன. அதே நேரத்தில் விஜயவாடா தனது மூன்றாவது இடத்தை நவி மும்பையிடம் இழந்தது. 100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், திரிபுரா முதல் இடத்தைப் பிடித்தது.

தூய்மை பாரத திட்டம் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கண்டறிந்து சுத்தம் மற்றும் சுகாதார அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை பட்டியலிடுவதற்காக ஸ்வச் சர்வேக்சன் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல்முறையாக எடுக்கப்பட்ட சர்வேக்சன் கணக்கெடுப்பு 73 நகரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது, 4,354 நகரங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்

Source link