கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 
விபத்தில் சிக்கிய மம்தா:
முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார் மம்தா.
ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது சிறிய விபத்து நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. 
மேற்குவங்கத்தில் பரபரப்பு:
தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தினார். 4 முதல் 5 பேர், தன்னை காரை நோக்கி தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. 
இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என மம்தா குற்றம்சுமத்தினார். 
மம்தாவை தாக்கிவிட்டதாக வெளியான செய்தி அம்மாநில தேர்தலில் பெரிய அளவில் எதிரொலித்தது. வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அந்த தேர்தலில் மம்தா பெரிய வெற்றியை பதிவு செய்தார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து, மூன்றாவது முறையாக மம்தா முதலமைச்சரானார். 
இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் மம்தா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ராமர் கோயில் திறந்த அதே நாளில், அனைத்து மத நம்பிக்கை பேரணியை மேற்கொண்டார். இதற்கிடையே, மம்தாவின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில் வெற்றி கொடி நாட்ட வேண்டும் என பாஜக தீவிர முயற்சிகளை மேற்காண்டு வருகிறது. 
இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..

Source link