எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22


2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 கோடி, 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வெளியிட்டு, வசூலில் 100 கோடி, 150 கோடி என பெஞ்ச்மார்க்குகளை உருவாக்கிக்கொண்டிருந்தது.

அதே காலகட்டத்தில்தான் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழ் சினிமாவில், 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கும் சற்று முன்னதாகவே தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப எல்லையையும், சந்தையையும் மொழி எல்லைகளுக்குள் சுருக்கிவிடாமல் உலகளாவிய அளவுக்குக் கொண்டு செல்ல கமல்ஹாசன் தனியொரு மனிதராக முயன்றுகொண்டிருந்தார்.

ஷங்கரின் `எந்திரன்’

ஹேராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை அப்படியான முயற்சிகள்தான். அதில் சில தோல்வியுற்றாலும், தசாவதாரத்தின் வெற்றி பலருக்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியது. அந்த நம்பிக்கையையும், அதுவரை உருவாக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப அனுபவங்களையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோன படம்தான் எந்திரன்.

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணி அதைச் சாதித்தது. இந்தியாவைத் தாண்டியும் தமிழ் சினிமாவைக் கொண்டு போக முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தது. அதோடு, இந்தியாவின் கமர்ஷியல் கேளிக்கை சினிமாவுக்கே ஒரு புதிய அளவுகோலையும் உருவாக்கியது. எந்திரனுக்குப் பிறகு இந்தி சினிமாவில் இப்படியான பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களுக்கான முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன. பின்னர் பாகுபலி, கேஜிஎஃப், கல்கி என தென்னிந்திய சினிமாவும் எந்திரன் போட்டுக்கொடுத்த பாதையை வெவ்வேறு விதங்களில் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே வந்தது. ஆனால், எந்திரன் உருவான தமிழிலோ அந்த அளவையும், தாக்கத்தையும் ஒரு சேர எட்டிய இன்னொரு படம் இன்னும் உருவாகவில்லை.

எந்திரனில் வசீகரன் எனும் விஞ்ஞானி, தனது கடும் உழைப்பின் பலனாக சிட்டி எனும் ஹியூமனாய்டு ரோபாட்டை உருவாக்குகிறார். அதை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்பது அவரது கனவு. ஆனால், மனித உணர்வுகள் இல்லாத ஒரு ரோபாட்டை ராணுவத்தில் இணைப்பது ஆபத்தானது என்று கூறி, அவரது மென்டாரும் ஏஐஆர்டி தலைவருமான பேராசிரியர் போரா அதை நிராகரிக்கிறார். சிட்டிக்கு மனித உணர்வுகளைப் புரியவைக்கும் வசீகரனின் முயற்சிகள், ஒரு கட்டத்தில் இயற்கையின் எதிர்பாராத தலையீட்டோடு சேர்ந்து வெற்றி பெறுகின்றன.

உணர்வுகள் வந்துவிட்ட சிட்டி, தான் உருவாக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்தே விலகத் தொடங்கியதும் வெறுத்துப்போகிறார் வசீகரன். அதன் பின்னர், போராவிடம் தஞ்சமடையும் சிட்டி அவர் செய்யும் மாற்றங்களாலும், தன்னுடைய சொந்த விருப்பங்களாலும் தீயசக்தியாக மாறுகிறது. இறுதியில், அதே சிட்டியிடமிருந்து அனைவரையும் வசீகரன் எப்படிக் காப்பாற்றினார் என்பது முடிவு.

படம் நெடுக கூஸ்பம்ஸ் மொமண்ட்ஸும், திருப்பங்களும் நிறைந்திருந்தன. ஷங்கரின் வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போலவே இதன் திரைக்கதையும் ஒரு ஃபார்முலாவுக்குள் எழுதப்பட்டிருந்தது. முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடுகிறது. 10-வது நிமிடத்தில் முழுமையான சிட்டியின் அறிமுகம். சலூன், டிராபிக் கான்ஸ்டபிள், முதியோர் இல்லம், குப்பத்து ரவுடிகள், சனாவுடன் தேர்வு சீட்டிங், டிரெயின் சண்டை என அடுத்த 50 நிமிடங்கள் சிட்டியின் அலப்பறைகள்.

சரியாக 60-வது நிமிடத்தில் ஏஐஆர்டி சோதனைக் காட்சி; சிட்டி நிராகரிக்கப்படுகிறது. உணர்வுகள் கிடைத்துவிட்ட சிட்டிக்கு 80-வது நிமிடத்தில் சனா மீது காதல் வருகிறது. இடைவேளை. அடுத்த 50 நிமிடங்களில் வசீகரன் சிட்டியைக் கைவிடுகிறார்; போராவின் கைகளுக்குச் சென்ற சிட்டி பெரும் சக்தியாக உருவெடுக்கிறது. 130-வது நிமிடத்தில் ஒரு சிட்டி இல்லை, ஒரு சிட்டி படையே உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற பிரமிப்பு. கடைசி 30 நிமிடங்கள் அந்தப் படையை வசீகரன் எப்படி வீழ்த்துகிறார் என்பதான முடிவு. இதற்கிடையில் பிரமிப்பான சண்டைக்காட்சிகளும், பிரம்மாண்டமான பாடல் காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வளவு பெரிய கற்பனை உலகத்தையும், இவ்வளவு தொழில்நுட்பச் சுமையையும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு படத்தை, இத்தனை எளிமையான ஒரு கமர்ஷியல் திரைக்கதை அமைப்புக்குள் ஷங்கர் அடக்கி வைத்திருப்பதுதான் எந்திரனின் சாதனைகளில் ஒன்று. இந்த திரைக்கதை உத்தி, 3 ஆக்ட் திரைக்கதை வடிவமைப்பு, சேவ் தி கேட் திரைக்கதைக் கட்டமைப்பு என அனைத்துக்குள்ளும் கச்சிதமாகப் பொருந்திப்போகக்கூடியது.

படம் முழுதும் ரஜினிகாந்த் நிறைந்திருந்தார். ஒரு ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே நமக்கு கூஸ்பம்ஸ் ஏற்படும். இரண்டு ரஜினிகாந்த்கள் வரும் போது ஆஹா! பத்து கமல்ஹாசன்கள் மட்டும்தான் வரவேண்டுமா? பத்து ரஜினிகாந்த்கள் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கும் போது, அந்தக் கற்பனையையும் தாண்டி, நூற்றுக்கணக்கான ரஜினிகாந்த்களை ஒரே காட்சியில் நிறுத்தியது எந்திரன்.

ஒரு கட்டத்தில் திரையிலும், திரைக்கு வெளியிலேயும் ரசிகர்களின் உணர்வை உச்சத்துக்குக் கொண்டு சென்ற அந்தக் காட்சிகளை, தமிழ் சினிமாவின் ஒரு சர்ரியலிஸ அனுபவம் என்றே சொல்லலாம். பொதுவாக அவரது படங்களில் அவருக்கான ஸ்டைல், மேனரிசம், பஞ்ச் டயலாக்ஸ், கீ மொமண்ட்ஸ் ஆகியவற்றில் அவரது தலையீடும், பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். அதை, இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் அவரே ஒப்புக்கொள்கிறார். அதுதான் அவரின் ரசிகர்களைக் கட்டிப்போடும் வழியென்று அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அதுதான், இப்படி ஒரு சூப்பர் ஸ்டாராக, அசைக்க முடியாத ஓர் எண்டர்டெயினராக அவரை உயர்த்தியிருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் அப்படியான தலையீடுகள் எதுவும் செய்யாமல், முழுக்கவும் இயக்குநருடன் ஒத்திசைந்து நடந்துகொண்டதாகச் சொல்கிறார்.

வசீகரன் கதாபாத்திரத்தின் எந்தக் கமர்ஷியல் பில்டப்பும் இல்லாத வெளிப்பாட்டிலேயே அதை நம்மால் உணரமுடியும். அதுவேதான் பின்னால், இறங்கியடிக்கப்போகும் சிட்டி பாத்திரத்தின் வீரியத்தை பன்மடங்கு உயர்த்தும் என்பதை அவர் நன்கறிவார். சிட்டியை ஒரு ரோபாட்டாகவே நாம் உணர்வதால், அதன் சேஷ்டைகளை நாம் கவனத்தில் கொள்வதில்லை. மொத்தத்தில் வழக்கமான கமர்ஷியல் மேனரிசம், பஞ்ச் டயலாக்ஸ் போன்றவை இல்லாத ரஜினிகாந்தை நாம் பார்த்ததாக ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது. அதுவே இந்தப் படத்தில் முற்றிலும் வேறான ஒரு ரஜினிகாந்தைப் பார்த்து ரசிக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியது.

ஐஸ்வர்யா ராய், தமிழில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர். சுமார் பத்தாண்டு காலம் இந்தியத் திரையுலகில் கோலோச்சியவர்.அவரது கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது எந்திரன். புரஃபஸர் போரா எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் டேனி டென்செங்பா நடித்திருந்தார். சந்தானம், கருணாஸ் ஆகியோர் வசீகரனின் உதவியாளர்களாக நடித்திருந்தனர்.

ஒளிப்பதிவு ஆர்.ரத்னவேலு. சேது, நந்தா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் பணியாற்றியிருந்த அவர், முதன்முறையாக ஷங்கரோடு இணைந்தார். எந்திரனில் இருந்த ஏராளமான சிஜிஐ, விஎஃப்எக்ஸ் காட்சிகளின் காரணமாக, ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு கேமரா கோணமும் முன்கூட்டியே நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டிருந்தன. நீண்ட காலமாக ஷங்கரோடு பணியாற்றிய பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்தார். ஸ்ரீநிவாஸ் மோகன் தலைமையிலான குழுவுடன், ஹாங்காங்கைச் சேர்ந்த கினோமோட்டிவ் ஸ்டுடியோஸ், மென்ஃபாண்ட் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிஜிஐ, விஎஃப்எக்ஸ் பணிகளில் ஈடுபட்டன. சாபு சிரிலின் கலை இயக்கத்தில் உருவான ஆய்வுக்கூடங்களும், பாடல் காட்சிகளுக்கான பிரம்மாண்டமான செட்களும் படத்தின் உலகத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றன.

அந்தக் காலகட்டத்தில் இந்திய சினிமா பயன்படுத்திய தொழில்நுட்பத்தின் எல்லையை எந்திரன் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தியது. அதன் பலனாக சிறந்த விஎஃப்எக்ஸ் மற்றும் கலை இயக்கம் என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

இசை ஏ.ஆர்.ரகுமான். ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரில்லருக்குத் தேவையான எதிர்கால ஒலியமைப்பையும், பரபரப்பையும், பிரம்மாண்டத்தையும் தனது பின்னணி இசையில் உருவாக்கியிருந்தார். அது எந்திரனின் தொழில்நுட்பப் பிரம்மாண்டத்துக்கு வெறும் துணையாக இல்லாமல், அதன் உலகத்தின் ஒரு பகுதியாகவே இயங்கியது. ‘புதிய மனிதா’, ‘காதல் அணுக்கள்’, ‘அரிமா அரிமா’ ஆகிய பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். ‘இரும்பிலே ஒரு இருதயம்’ பாடலை மதன் கார்க்கியும், ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை பா.விஜயும் எழுதியிருந்தனர்.

வசனம் சுஜாதா, மதன் கார்க்கி, ஷங்கர் என்று போடப்படுகிறது. இந்தப் படம் வெளியாவதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திவிட்டார். அவரது கடைசிப் படம் இது. ‘வாலண்டைன்ஸ் டேக்கு முருகர் படம்’, ‘ஷேவிங் செட் தேவைப்படுமோன்னு…’, ‘நான் கொடுத்த 512 முத்தம்’ போன்ற வசனங்களில் சுஜாதா பளிச்சென வெளிப்படுகிறார்.

ஷங்கர் தனது முதல் படமான ஜெண்டில்மேன் தொடங்கி, வசனத்துக்காக பாலகுமாரன், சுஜாதா ஆகிய இருவரோடுதான் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். எந்திரனிலும் சுஜாதாவின் பங்களிப்பு கணிசமானதாக இருந்திருக்கிறது என்பதை இந்த வசனங்களிலிருந்தே உணர முடிகிறது. குறிப்பாக, ‘காதல் அணுக்கள்’ பாடலுக்கு முன்பாக வரும் காதல் ரத்து காட்சியே, ‘512 முத்தம்’ எனும் அந்தச் சிறிய சுஜாதா தருணத்திலிருந்து விரிந்திருக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது.

சுஜாதா இல்லாத நிலையில், தொடர்ந்த திரைக்கதை ஆக்கத்தில் மதன் கார்க்கியும் ஷங்கரும் அந்த இடத்தைத் தங்களால் இயன்றவரை நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படம் அவரது கடைசிப் பங்களிப்பாக அமைந்த நிலையில், தொடக்கத்தில் அவருக்கு ஓர் அஞ்சலியோ, சமர்ப்பணமோ இடம்பெறாதது ஒரு சிறிய குறையாகவே மனதில் நிற்கிறது.

படத்தைத் தயாரித்திருந்தது சன் பிக்சர்ஸ்க்காக கலாநிதி மாறன். சன் பிக்சர்ஸின் முதல் படம் இது. கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தது ஷங்கர். ஷங்கர் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மார்க்கெட்டை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உயரத்துக்குக் கொண்டு போனவர்களில் முதன்மையானவர். 1993- ஜெண்டில்மேன் தொடங்கி 2010- எந்திரன் வரை தோல்வியே காணாத சரித்திரம் ஷங்கருடையது. ஷங்கரின் திரைக்கதைகள் எப்போதுமே இயல்புக்கு சற்று மாறானவை. நிஜத்துக்கு நெருக்கமானவையல்ல. அவரது ஹீரோக்கள் சாதாரண மனிதர்களாக இருப்பதில்லை; லாஜிக்குகளை மீறிய செயற்கரிய செயல்களைச் செய்யும் ‘லார்ஜர் தென் லைஃப்’ நபர்களாகத்தான் இருப்பார்கள்.

ஒரு சாதாரண சமூகப்படத்திலேயே அவரது ஹீரோ அப்படியானவராக இருக்கும்போது, ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையில் கேட்கவா வேண்டும்? சிட்டியின் உருவாக்கம் தொடங்கி, மனித உணர்வுகளைப் பெறுவது, அதன் பிறகு அது அடையும் அசாத்தியமான சக்திகள் வரை, படத்தின் விஞ்ஞான தர்க்கத்தைவிட ஷங்கரின் ஃபேண்டஸி தர்க்கமே பல இடங்களில் மேலோங்கி நிற்கிறது. சிட்டி ஒரு ரோபாட்டா, எக்ஸ்-மேனில் வரும் மேக்னிட்டோவா என்ற சந்தேகம் வருமளவுக்கு அதன் சக்திகள் விரிவடைகின்றன. ஆனால், அதுதான் எந்திரன். அறிவியலைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துவது அவர் நோக்கமில்லை, அறிவியலைப் பின்னணியில் வைத்துக்கொண்டு ஒரு பிரம்மாண்டமான கமர்ஷியல் ஃபேண்டஸி எண்டெர்டெயினர் சினிமாவை உருவாக்குவதுதான் அவர் நோக்கம். அதில் முழு வெற்றியடைந்தார்.

எந்திரன்

உணர்வுகள் வரப்பெற்ற பின்னர் சிட்டி, சனாவைக் காதலிக்கிறது. அப்போது வசீகரன் சொல்கிறார், ‘நீ ஒரு மெஷின் சிட்டி’. அதற்கு சிட்டி, ‘ஆமா, ஆனா சந்தோசம், கோபம், துக்கம் என எல்லா உணர்வுகளும் இருக்கிற மெஷின்’ என்று பதில் சொல்கிறது. அப்போது வசீகரன் ஒரு ஸ்டேட்மெண்டைச் சொல்கிறார்.

‘உனக்கு உணர்வுகள், ஒரு அறிவாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கு’

அறிவும், உணர்வும் வெவ்வேறானவை. நூறு பேரின் அறிவும் திறனும் சிட்டிக்கு இருந்தாலும், உணர்வுகள் இல்லாததால் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதைக் கொடுக்க வசீகரன் போராடுகிறார். சிட்டி உணர்வுகளைப் பெற்றதும் வேறு சிக்கல்கள் முளைக்கின்றன. இப்போது வசீகரன், உணர்வையும் ஓர் அறிவாக மட்டுமே பயன்படுத்து என்கிறார். மனிதர்களுக்குத்தான் எவ்வளவு சுயநலம், இல்லையா?

எந்திரன் அதற்கு முன்பு இருந்த நமது சினிமாவின் கிரியேட்டிவிடி, தொழில்நுட்பம், சந்தை எனப் பல எல்லைகளைத் தகர்த்து விரிவாக்கியது. இன்று இந்தியும், தெலுங்கும் எட்டி நடைபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நாமும் அவற்றை முறியடித்தாக வேண்டும் எனும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் எந்திரன் நமக்குள் ஏற்படுத்துகிறது. அதுவே நமது பெருமையும், நம்முன்னிருக்கும் சவாலும்!

(தொடரும்)



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed