பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி. அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம். வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் நாடு. இது தெரிந்தும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்கும் சில கேள்விகள்
1. 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ்நாடு வரியாக தந்த ஒரு ரூபாய்க்கு, மத்திய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?2. மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இண்டி கூட்டணியின் நிலைப்பாடா?
3. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?
4. நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், அதிவிரைவு ரயில்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடு என 1998 – 2004 வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதை யாராலும் மறுக்க முடியுமா?
பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி:
இதற்கு முன்னதாக கச்சத்தீவு விவகாரம்தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே” எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் காண