நான் ரவுடியா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை எச்சரிக்கை..

தன்னை ரவுடி என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதனை நிரூபிக்க முடியுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பதிலளித்தார்.

எல்லா கட்சித் தலைவர்களையும் அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், அருவருப்பான அரசியலில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். தன்னை ரவுடி என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும், தன்னை ரவுடி என்று நிரூபிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை ஐபிஎஸ் தான் படித்தாரா என்ற சந்தேகம் தனக்கு வருவதாக தெரிவித்துள்ள செல்வபெருந்தகை, உண்மைக்கு புறம்பாக பேசினால் என்ன வழக்கு வரும் என்று அண்ணாமலைக்கு தெரியுமா? என்று வினவியுள்ளார்.

சட்ட பாதுகாப்பு தெரியாமல் தலித் மீது அவதூறு பேசினால் என்ன நடக்கும் என்று அண்ணாமலைக்கு தெரியுமா? எஸ்சி எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தால் என்ன நடக்கும் தெரியுமா? எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன்ஜாமின் கிடைக்குமா? என்றும் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் மீது நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், ரவுடி என்று அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார். இந்த விவகாரத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் செல்வபெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், 32 பக்கள் உளவுத்துறை அறிக்கையில், தமிழக பாஜகவில் 124 குற்றவாளிகள் பாஜகவில் உள்ளதாகவும், அவர்கள் மீது 834 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.