Pakistan Foreign Ministry responds to Defence Minister Rajnath Singh remarks on terrorism | தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங்


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், இந்திய அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து சம்பவம் செய்த இந்தியா?
இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20 பயங்கரவாதிகளை இந்திய புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டிருந்தது.
தனியார் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், “அண்டை நாட்டிலிருந்து வரும் பயங்கரவாதிகள் பாரதத்தில் அமைதியை குலைக்க முயன்றாலோ அல்லது பாரதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றாலோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம். பிரதமர் கூறியது முற்றிலும் உண்மை. இந்தியாவுக்கு அந்த பலம் உள்ளது. பாகிஸ்தானும் இதை உணரத் தொடங்கியுள்ளது” என்றார்.
ராஜ்நாத் சிங்குக்கு பாகிஸ்தான் பதிலடி:
ராஜ்நாத் சிங் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்த பதிலடியில், “மிகையான தேசியவாத உணர்வுகளை தூண்ட வெறுப்பு பேச்சு பேசுவது இந்திய அரசாங்கத்திற்கு வழக்கமாகிவிட்டது. எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி தேர்தல் ஆதாயத்திற்காக இம்மாதிரியான செயல்களை செய்கிறது. பாகிஸ்தான் குடிமக்களை பயங்கரவாதிகள் என தன்னிச்சையாக அறிவித்து, அவர்களை சட்ட விரோதமாக கொல்ல தயாராக இருப்பதாக இந்தியாவே ஒப்பு கொண்டுள்ளது. இந்தியாவின் கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் நாட்டில் புகுந்து பாகிஸ்தான் குடிமக்கள் இருவரை சட்டவிரோதமாக கொன்றதாக அந்நாட்டு வெளியுறவு செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி கடந்த ஜனவரி மாதம் பகீர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “தவறான தகவல்களை பரப்பி, உள்நோக்கம் கொண்ட இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த கருத்து அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு.  
பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. நாடுகடந்த சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிக்க: தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி – பகீர் ரிப்போர்ட்

மேலும் காண

Source link