Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்


Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.
காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்:
சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,  டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராமில் இருந்து 2023 இல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.
காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்:
அதே நேரத்தில் பீகாரின் பெகுசராய் உலகின் மிகவும் மாசுபட்ட பெருநகரப் பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான பட்டியலில் கூட இல்லாத இந்த நகரம், 2023ம் ஆண்டு பட்டியலில் நேரடியாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில் 134 நாடுகளில் நடந்த ஆய்வில்  இந்தியா மூன்றாவது மோசமான காற்றின் தரத்தைக கொண்டிருந்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம் மற்றும்  பாகிஸ்தான் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், 2022 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 53.3 மைக்ரோகிராம் PM2.5 செறிவுடன், மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நாடுகளின்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காற்றின் நிலை:
உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றில் இருக்க வேண்டிய நுண்துகள்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தியாவில் 7 மடங்கு அதிகமாக உள்ளது. இதனை 133 கோடி மக்கள் சுவாசிப்பதாக, அதாவது இந்திய மக்கள் தொகையில் 96 சதவிகிதம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 66 சதவிகிதத்திற்கும் அதிகமான நகரங்கள் ஆண்டு சராசரியாக, ஒரு கன மீட்டருக்கு 35 மைக்ரோகிராம்களை விட அதிகமான நுண் துகள்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குழந்தைகளுக்கு ஆபத்து:
PM2.5 காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இருக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மேலும் சிக்கலாகலாம். உயர்ந்த அளவிலான நுண்ணிய துகள்கள் காற்றில் இருப்பது, குழந்தைகளுக்கு அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம், மனநலப் பிரசினைகளுக்கு வழிவகுக்கும். உலகளவில் ஒன்பது பேர் பலியானால் அதில் ஒன்று காற்று மாசுபாட்டால் நிகழ்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.
ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் உலகளாவிய குறைந்த விலை காற்றின் தர சென்சாரக்ளின் தரவுகளில் இருந்து இந்த ஆய்வு முடிவுகள் ஒருங்கிணக்கப்பட்டதாக IQAir தெரிவித்துள்ளது. இந்த நிலையங்கள் மற்றும் சென்சார்கள் ஆனது ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி வசதிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.
 
 

மேலும் காண

Source link