தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு சரிபார்ப்பு நேற்று மாலை நிறைவடைந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்புமனுக்களைத் தேர்வு ஆணையம் ஏற்றுக் கொண்டு அவர்களை வேட்பாளர்களாக அங்கீகரித்துள்ளது.
அக்டோபர் 6 – ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதேவேளையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக தாராபுரத்தில் இடைத்தேர்தல் வர காரணமான அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும் தற்போதைய த.வெ.க வேட்பாளருமான சத்தியபாமா சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் என இரண்டிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.

1 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்பட மொத்தம் 16 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். 5 கோடியே 96 லட்ச ரூபாய் சொத்து மதிப்புடன் அ.தி.மு.க வேட்பாளர் இரண்டாம் இடத்திலும் 44 லட்ச ரூபாய் சொத்து மதிப்புகளுடன் தி.மு.க வேட்பாளர் சுகன்யா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதேவேளையில் குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மீது ஒரு குற்ற வழக்கு, சத்தியபாமா மீது மூன்று குற்ற வழக்குகள் எனக் குற்ற வழக்குகளிலும் தற்போதைய த.வெ.க வேட்பாளர் முதல் இடத்தில் உள்ளார்.
தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.
























