சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றிய பிப்புல்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது.
இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் ஒருவர் பின் ஒருவராக உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தன்னார்வலர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், ரகசியம் என்பது ஒன்று தேவை… சிலவற்றை மூடிய அரங்கில் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் 17 மணி நேரம் வரை வேலை பார்த்துள்ளதாக தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் பணியைத் தொடர்ந்து, மக்களின் மன நிலை, அரசியல் அனைத்து தெரிய வந்ததிருக்கும் என்றார்.
ஜனநாயகம் மெதுவாக தான் நகரும்… அப்படி தான் இந்தியாவில் உள்ளது என்ற அண்ணாமலை, தப்பானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், 5 ஆண்டுகள் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றி விடும் என நம்பிக்கை தெரிவித்தார்
போலீஸ் அதிகாரியாக இருந்த பொது, சரி தப்பு என்ற முடிவை மட்டும் எடுக்க முடிந்ததாக தெரிவித்த அவர், ஆனால், தனது வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுக்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாக கூறினார்.
இப்போது 40 வயவதாகவும், முதல் 37 ஆண்டுகள் முடிவெடுப்பது என்பது தனக்கு சுலபமாக இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சித் தலைவர் ஆன பிறகு, கடந்த மூன்று ஆண்டுகள் கடினமாகத்தான் இருந்தது என்று கூறினார்.
எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும், சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா?? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் போன்றவை வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.