Tamil Nadu Legislative Assembly likely to start on February 12, Tamil Nadu Budget tabled on February 19


2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு விரைவில் வெளியிடவுள்ளார்.
7ஆம் தேதி தமிழகம் திரும்பும் முதல்வர்
ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அதற்கடுத்த வாரமான திங்கள்கிழமையன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்த நிலையில், 12ஆம் தேதி தொடங்கவுள்ள கூட்டத் தொடருக்கான ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதவுள்ளது.
12ஆம் தேதி கூட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தேவை
திட்டமிட்டபடி 12ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கினால், தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் வாசித்து கூட்டத் தொடரை தொடங்குவார். அதற்கான, தமிழ் மொழிப்பெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு, அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுறும். கடந்த 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகள் சேர்த்தும் விடுத்தும் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தியது சர்ச்சையானது. அந்த நிகழ்வில் இருந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அரசு அனுப்பிய பல்வேறு கோப்புகளை ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலால் சமீபத்தில் முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நிகழ்ந்தது.
என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ரவி?
இந்நிலையில், இந்த முறை தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க போகிறாரா ? இல்லை கடந்த ஆண்டு போல உரையில் இல்லாத சொற்களை பயன்படுத்தி பேசப்போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த தினத்தன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் புறக்கணித்தன.
தேநீர் விருந்தில் பங்கேற்ற நிதி அமைச்சர்
இருப்பினும், தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளதால் ஆளுநர் இடையே பெரிய அளாவிலான மோதல் போக்கை ஏற்படுத்திக்கொள்ளாமல், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் முயற்சியாக இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
12ஆம் தேதி கூட்டத் தொடர் தொடங்கினால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதில் பேரவை உறுப்பினர்கள் பேசுவர். இறுதியாக, ஆளுநர் உரைக்கு முதல்வர் பதிலளித்து பேசுவார். அதோடு, கவர்னர் உரை மீதான விவாதம் நிறைவடையும்.
தமிழக பட்ஜெட் பிப்.19ல் ?
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், பிப்ரவரி 19ஆம் தேதியே இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாளான 20ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட பேரவை நிகழ்வுகள் இந்த மாதம் 24 அல்லது 25ஆம் தேதி வரை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் காண

Source link