ஊடகவியலாளர் ப்ரியன்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, காங்கிரஸ் – திமுக இடையே மோதல் போக்கு தொடங்கியது. அதனால், தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

அதேநேரம், தேசிய அளவில் தங்களுக்குப் பிற வலுவான வாய்ப்புகள் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, தி.மு.க தனது பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை ஈடுபடுத்தியது.

இதையடுத்து, “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க-வுடன் காங்கிரஸ் இணக்கம் காட்டியதும், ஆட்சியிலும் பங்கேற்றதும் தி.மு.க தலைமைக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது” என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ப்ரியன்.

ஊடகவியலாளர் ப்ரியன்

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் 22 எம்.பி-க்களைக் கொண்ட பலமான கூட்டணியாக இருந்தபோதிலும், உள்ளூர் அரசியலுக்காகத் தம்மை அலட்சியமாகக் கருதி காங்கிரஸ் உதறித் தள்ளியதாக தி.மு.க கருதியது. இதனால், தேசிய அளவில் இந்தியா கூட்டணி மீட்டிங்குகளைப் புறக்கணித்துவிட்டு, நாடாளுமன்றத்திலும், கரப்பான் பூச்சி கட்சியின் ஜந்தர் மந்தர் போராட்டங்களிலும் கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க தனித்தே களமிறங்கியது” என்றார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து த.வெ.க தலைமையில் புதிய கூட்டணியை அமைத்த முதல்வர் ஜோசப் விஜய், செப்டம்பர் 9-ம் தேதி, இக்கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிட்டார்.

இந்தச் சூழலில், மாநிலத்தில் ஆட்சியை இழந்தும், மத்தியில் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறியும் தனிமைப்பட்ட தி.மு.க, காங்கிரஸ் – பா.ஜ.க இல்லாத ஒரு வலுவான மூன்றாவது அணியை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பொறுப்பு தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இதன் தொடக்கமாக, செப்டம்பர் 12-ம் தேதி மும்பையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோரை கனிமொழி சந்தித்துப் பேசினார்.

மேற்கு வங்க இடைத்தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மம்தா பானர்ஜி அப்போது அதிருப்தியில் இருந்தார். அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, கனிமொழி, மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், காங்கிரஸ் இல்லாத மூன்றாம் அணியை அமைப்பதே முதன்மைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், திருமாவளவன், இடதுசாரிக் கட்சிகள், தி.மு.க ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் தொடரும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கேற்றவாறு தி.மு.க மீதான எதிர்ப்பு அணுகுமுறைகளின் வேகத்தை காங்கிரஸ் சில காலம் குறைத்திருந்தது.

ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் போன்றோர் `இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது’ என்பதை சூசகமாகத் தெரிவித்துவந்தனர். ஆனால். தி.மு.க உறுதியாக மறுத்துவந்தது.

ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்தி

இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் சார்பில் ஹரேந்திர மாலிக், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், JKNC தலைவர் உமர் அப்துல்லா, IUML தலைவர் சாதிக் தங்ஙள், JKPDP தலைவர் மெஹபூபா முஃப்தி, NCP தலைவர் சரத் பவார், NCP-SP தலைவர் சுப்ரியா சுலே, CPM தலைவர் எம்.ஏ. பேபி, CPI தலைவர் டி. ராஜா மற்றும் CPIML கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.

JMM தலைவர் ஹேமந்த் சோரன், UBT தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இணையம் மூலம் பங்கேற்றுள்ளார். இவர்களுடன் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர். சுருக்கமாகச் சொல்வதானால் இந்தியா கூட்டணியின் முக்கியக் கட்சிகளாக இருந்த தி.மு.க, ஆம் ஆத்மி கட்சியைத் தவிர மீதமுள்ளவை பங்கேற்றிருக்கின்றன.

அந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஞானேஷ்குமாருக்கு எதிராக முன்னெடுக்கவிருக்கும் போரட்டம் குறித்து சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராகுல் காந்தி, விஜய்
ராகுல் காந்தி, விஜய்

இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. மேலும், முதல்முறையாக இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் த.வெ.க-வும் கலந்துகொண்டிருக்கிறது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதன் அரசியல் பின்னணி குறித்து விரிவாகப் பேசிய ஊடகவியலாளர் ப்ரியன், “காங்கிரஸை விட்டு விலகியிருப்பது தி.மு.க-வுக்கு மத்திய பா.ஜ.க அரசுடன் கடுமையான மோதலைத் தவிர்த்து ஒரு ‘பாதுகாப்பான சூழலை’ ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது என்பது எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து, நடைமுறையில் பா.ஜ.க-வுக்கே சாதகமாக முடிந்துவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, தி.மு.க-வின் `மூன்றாவது அணி’ நகர்வுகள் அனைத்தும் காங்கிரஸுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தற்காலிக உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தனக்கென ஒரு கூட்டணியை வைத்திருந்தாலும், அது மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்தும் போக்கையே கடைப்பிடிப்பதாக தோழமைக் கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றனர்.

ப்ரியன்
ப்ரியன்

சமாஜ்வாடி கட்சி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வைத்துள்ள உத்தரப் பிரதேசத்தில், 2 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் அதிக சீட்டுகளைக் கேட்கும் என்பதால் அகிலேஷ் யாதவ் கூட்டணியை விட்டுத் தள்ளியே இருக்கிறார். பஞ்சாப், கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலால் ஆம் ஆத்மியும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் விலகியே நின்றன. மேலும், ராகுல் காந்தியை 2029-ல் மீண்டும் ஒரே பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் சரத் பவார், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களிடம் தயக்கமே நீடிக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தலித் தலைவர்கள், 22 எம்பிக்களைக் கொண்ட தி.மு.க-வை இழப்பது தேசிய அளவில் பெரும் பலவீனம் என்பதை உணர்ந்துள்ளனர். எனவே, அக்டோபர் 10 அன்று ராகுல் காந்தி தமிழ்நாடு வரும்போது அவரை மு.க.ஸ்டாலினுடன் சந்தித்துப் பேச வைக்கும் முயற்சிகளை கார்கே முன்னெடுத்துள்ளார்.

`தவெக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் மட்டுமே பேச்சுவார்த்தை’ என்ற தி.மு.க-வின் நிபந்தனையும், கார்கே – ஸ்டாலின் சந்திப்பு செய்தியும் வெளியானதால் த.வெ.க-வுக்குப் பெரும் பயம் தொற்றிக்கொண்டது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

காங்கிரஸ் தங்களைக் கழற்றிவிட்டு மீண்டும் தி.மு.க-விடம் சென்றுவிட்டால் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித்து விடப்படுவோம் என்ற நிலை த.வெ.க-வுக்கு உருவானது.

பா.ஜ.க-வுடன் நிதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நேரடியாக மோதாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்த த.வெ.க, காங்கிரஸையும் நழுவ விடக் கூடாது என்ற “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்ற அணுகுமுறையைக் கைக்கொண்டிருந்தது. ஆனால், கார்கேவின் நகர்வால் பயந்த த.வெ.க, வேறு வழியின்றித் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் தொடர்பான காங்கிரஸின் ‘இந்தியா’ கூட்டணி மீட்டிங்கில் இன்று பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுருங்கக்கூறின், தற்போது நடக்கும் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்துமே மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்கவும் தங்களின் பலத்தைத் தக்கவைக்கவும் செய்யப்படும் தற்காலிக நகர்வுகளே. 2029 பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே உண்மையான கூட்டணி வடிவங்களும், தலைவர்களும், தமிழ்நாடு மற்றும் தேசிய அரசியல் மாற்றங்களும் முழுமையாக உருவெடுக்கும். அதுவரை இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்” என்றார் விரிவாக.

Source link


Latest News

View All

  1. Loved the writing voice here, friendly without being fake and confident without being arrogant, and a stop at jewelwillowtradecollective carried…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed