கடனில் மூழ்கிய அமெரிக்கா.. டிரம்பின் ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் உச்சத்தை தொடும் கடன்..!!


கடனில் மூழ்கிய அமெரிக்கா.. டிரம்பின் ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் உச்சத்தை தொடும் கடன்..!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்க அரசின் ஒட்டுமொத்த தேசிய கடன் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலர் என்ற பிரம்மாண்டமான தொகையை எட்டியுள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.அமெரிக்காவில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது என்றால் நிச்சயம் அது உலக பொருளாதாரத்தையே பாதிக்கும்.

அமெரிக்க கருவூல துறை வெளியிட்ட அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நாட்டின் மொத்த பொது கடன் 40.047 டிரில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இதில் 32.266 டிரில்லியன் டாலர் பொதுமக்களிடம் உள்ள பத்திரங்கள் மூலமாகவும், 7.782 டிரில்லியன் டாலர் அரசுக்கு இடையிலான கடன் holdings மூலமாகவும் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் தேசிய கடன் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஜனவரி 2017-ல் டொனால்ட் ட்ரம்ப் முதன்முதலில் பதவியேற்றபோது, கடன் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 40 டிரில்லியனை தாண்டியுள்ளது. இந்த கடன் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு, கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் நிர்வாகமும் மேற்கொண்ட அவசர கால கடன்களால் ஏற்பட்டது.

இது தவிர இரண்டு நிர்வாகத்திலுமே வரி குறைப்பு செய்யபப்ட்டது, அதே வேளையில், அரசு செலவுகள், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி மற்றும் அதிகரித்து வரும் வட்டி சுமை ஆகியவை இந்த கடன் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பட்ஜெட் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இது நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்கும் என எச்சரிக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்கா ஒரு பெரும் நிதி நெருக்கடியை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர். 40 டிரில்லியன் டாலர் என்பது வெறும் அரசு கணக்கு புத்தகத்தில் உள்ள எண் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். பணவீக்கம் அதிகரிப்பது, பட்ஜெட்டில் பிற முக்கிய தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைவது போன்ற சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர்.

கடன் அதிகரிப்பால், அந்த கடனுக்கான வட்டி செலுத்துவதே நாட்டின் பட்ஜெட்டை விட அதிகமாகிவிட்டது. இது கடனை மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது என்கின்றனர். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம், அரசு மேற்கொள்ளும் வீண் செலவுகளை குறைப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் கடன்-ஜிடிபி விகிதத்தை சீராக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் போன்ற புதிய சட்டங்கள் மூலம் இன்னும் பல டிரில்லியன் டாலர் கடன் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. அரசியல் தலைவர்கள் உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் இது, வரி உயர்வு, செலவு குறைப்பு அல்லது இவை இரண்டுமே இணைந்த ஒரு உறுதியான நிதி திட்டம் மட்டுமே நாட்டை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஐந்தே மாதங்களில் மட்டும் கடன் 39 டிரில்லியனிலிருந்து 40 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் நிதிநிலைமை எவ்வளவு வேகமாக பாதாளத்தை நோக்கி செல்கிறது என்பதையே காட்டுகிறது என்கின்றனர். டிரம்ப் ஈரான் போர் போன்ற விஷயங்களுக்கு பணத்தை செலவிடாமல் நாட்டின் நிதி நிலவரத்தையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed