ulaipalar dhinam movie director criticise actor vijay political entry details | 1000 கோடி சம்பாதிக்க அரசியல் கட்சி தொடங்கும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்


சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்கக் கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது.
இன்று உலகத்தில் நாடு கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, கலாச்சாரங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தினம் என்றால் அது உழைப்பாளர்கள் தினம் மட்டுமே, வேறு எந்த தினமும் இல்லை. அப்படிப்பட்ட மே தினத்தை மையமாக கொண்ட இந்த ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது” என்றார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பீராஜன் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன் சார், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.
தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் ரூ.10 லட்சம், அவரோட உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், ரூ.10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார்.
‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 
லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார்.
தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையை எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 
இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் ரூ.100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், ரூ.1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 
ரூ.500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது.
இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசு பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண

Source link