18 மணி நேர முயற்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!


Borewell: ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆழ்துளை கிணற்றை தோண்டுவதற்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு:
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் லச்சியன் கிராமத்தில் 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த குழந்தை நல்வாய்ப்பாக மீட்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்ததையடுத்து, நேற்று மாலை 6:30 மணிக்கு மீட்பு பணிகள் தொடங்கியது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், “குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றபோது ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
அந்த குழந்தை, தலைக்குப்புற விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு, உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விஷயம் தெரிய வந்தது. குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக சுமார் 21 அடி ஆழத்தில் அதிகாரிகள் குழி தோண்டினர்” என தெரிவித்தது.
18 மணி நேரம் நடந்த மீட்பு பணி: 
மீட்பு பணியின்போது, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காகவே, ஆழ்துளை கிணற்றில் கேமரா பொருத்தப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை குறித்து தெரியவில்லை. மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் மருத்துவக் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்பு படையினரும் இருக்கின்றனர். மேலும் அந்த இடத்தில் திரண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஊசி உள்ளிட்ட அவசர முதலுதவி மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. குழந்தை மீட்கப்பட்டவுடன் உடனடியாக இண்டியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தையின் தாத்தாவால் அந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. 
கடந்தாண்டு, பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2022ஆம் ஆண்டு, சத்திஸ்கர் சம்பா மாவட்டத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது குழந்தை ஒன்று, 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது. 
இதையும் படிக்க: தேயிலை பறித்து டீ போட்டு அசத்திய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா.. களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்!

மேலும் காண

Source link