பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா |  `சினி'ஸ்கோப் 16

[ad_1]

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி’ஸ்கோப் தொடர்!

வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ்சாத, யாருக்கும் அடங்காத ரவுடிப்பயல் ஒருவன் இருக்கிறான். அவன் பருத்திவீரனின் சித்தப்பா செவ்வாழை. என்ன காரணத்துக்காகவோ அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. இறந்துபோன அவனது அண்ணனின் மகனைத் தன் மகனாகக் கருதி வளர்க்கிறான். அவன் வாழ்க்கையிலேயே செய்யும் ஒரே ஒரு உருப்படியான செயல் அது மட்டும்தான். அதையும் அவன் சரியாகச் செய்யவில்லை. பருத்திவீரனைக் கண்டித்துப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கவில்லை. அவனுக்கு அந்த விழிப்புணர்வு இல்லை அல்லது பருத்திவீரன் படிக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, ஒழுக்கமாக விவசாயம் கற்றுக்கொடுத்தோ அல்லது ஏதாவது கூலிவேலைக்குப் பழக்கியோ அவனொரு நல்ல வாழ்க்கை வாழ வழி செய்துகொடுக்கவில்லை.

பருத்திவீரன்

மாறாக தன்னைப்போலவே குடிகாரனாக, அடிதடி- வெட்டுக்குத்துவில் ஈடுபடும்; போலீஸுக்கும், சட்டத்துக்கும் பயப்படாத ஒரு ரவுடியாக, விலைமகளிரிடம் செல்லக்கூடிய பொறுக்கியாக வளர்த்து வைத்திருக்கிறான். அவர்களது நோக்கமே கமுதி சப்-ஜெயிலோடு நம் புகழ் நின்றுவிடக்கூடாது, சென்னை செnட்ரல் ஜெயில் வரை நாம் புகழ்பெற வேண்டுமென்பதாக இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட வளர்ப்பு.

எட்டு வயதில், கிணற்றில் தவறி விழுந்த தன் உயிரைக் காப்பாற்றினான் எனும் ஒரே காரணத்துக்காக, தன் வாழ்நாளெல்லாம் பருத்திவீரன் மீதான நன்றியுணர்ச்சி கொண்டிருக்கும் முத்தழகு அதைக் காதலாக மாற்றிக்கொண்டு காத்திருக்கிறாள். ஆனால், எதுவுமே சரியான திசையில் போவதாகத் தெரியவில்லை. பருத்திவீரனோ அவளது காதலைப் புரிந்துகொண்டவனாகத் தெரியவில்லை. முத்தழகுவின் அப்பா கழுவனும் இந்தக் காதலை ஒருநாளும் ஏற்கப்போவதில்லை. பருத்திவீரனின் பிறப்பிலிருக்கும் சாதிக்கலப்பு, அவனை மிகப்பெரிய அளவில் உறுத்திக்கொண்டிருக்கிறது.

ஒருநாள் முத்தழகு, செவ்வாழைக்கு முன்பாக வந்து நிற்கிறாள். ‘அவனுக்கு சித்தப்பன் மாதிரியா இருக்க நீயி? தெருப்பொறுக்கி மாதிரில்ல இருக்க! கூடவே இருக்கியே, ஒரு நல்ல புத்தி சொல்லியிருப்பியா? ஒரு வேலைவெட்டிக்கு அனுப்பியிருப்பியா? அவனுக்கு கல்யாணம் காய்ச்சினு பண்ணி வைச்சி ஆளாக்கிப் பாக்கணும்னு நினைச்சிருப்பியா? உனக்கு அதெல்லாம் ஆயிருந்தால்ல தெரிஞ்சிருக்கும்!’ என்று நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு வார்த்தை கேட்கிறாள்.

அங்கு திரும்புகிறது கதை. செவ்வாழை தன் தவறைப்பற்றி யோசிக்கிறான். பருத்தியையும் யோசிக்க வைக்கிறான். அவனது மனமும் அவளது காதலைப் புரிந்துகொண்டு இறங்கி வருகிறது. அதன் பின்னர் என்னவானது என்பது இந்தப் படத்தின் கதை.

சரவணன்
சரவணன்

ஓர் அசலான தமிழ்நாட்டுக் கிராமத்தின் நாட்டார் தெய்வக் கோவிலின் வருடாந்திர கொடை விழாவில் தொடங்குகிறது படம். ஒருபுறம் பொங்கல் வைக்கிறார்கள், மறுபுறம் கரகப்பாட்டு, இன்னொரு புறம் சாமிக்கு அபிசேக வழிபாடு என விழா சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இன்னும் சீட்டுக் கச்சேரி, ஒயிலாட்டம், நெற்றியில் தாறுமாறாக திருநீறு பூசப்பட்ட, பதக்கச் சங்கிலி அணிந்த தாவணிப்பெண்கள், அவர்களுக்கு நடுவே எந்தச் சிறப்பு அலங்காரங்களும், கேமராக் கோணங்களும் இல்லாத கதாநாயகி, ராட்டினம், சின்னப்பிள்ளைகளுக்கு மொட்டையடித்து காதுகுத்தும் நிகழ்வுகள், பொம்மைக்கண்ணாடிகள், காவலுக்கு வந்த போலீஸ்காரர்கள், காணாமல் போன ஒயிலாபுரம் ஒச்சு குறித்த குழாய் ரேடியோ அறிவிப்பு, பொய்க்கால் குதிரை, உலகநாயகன் கமல்ஹாசன் நற்பணி மன்ற பேனர்கள், ’ஏம்யா இவ்வளவு போலீசு வந்திருக்கீக, யாராச்சும் மந்திரி வர்றாரா’ என போலீசிடம் குசலம் விசாரிக்கும் மீசைக்காரர், ’அது ஒண்ணுதாம்யா உங்களுக்குக் கொறச்சல்’ என்று சலித்துக்கொள்ளும் இன்ஸ்பெக்டர், பறையிசை என மாண்டாஜ் காட்சிகள் போய்க்கொண்டே இருக்கின்றன.

சுமார் 11 நிமிடங்கள். அதன் பின் தோன்றும் கதாநாயகன் பருத்திவீரன், முன்பகை காரணமாக ஒரு குஸ்தி வாத்தியாரைக் கத்தியால் குத்துகிறான். முதல் காட்சியில், முதல் ஷாட்டிலேயே கதைக்குள் போய்விட வேண்டுமென்று திரைக்கதை இலக்கணங்கள் சொல்கின்றன. ஆனால், அமீர் எதற்காகத் தொடக்கக் காட்சியில், இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்?

ஒரு சினிமாவில் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் புதுமை மற்றும் தனித்தன்மையைவிட, அதன் கதை மாந்தர்களின் உண்மைத் தன்மையும், நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர்களின் இயல்பையொத்த உண்மையான எதிர்வினையும்தான் அந்த சினிமாவுக்கு ஒரு கலைத்தன்மையைத் தருகிறது. அதுவே பார்வையாளர்களை சினிமாவோடு ஒன்ற வைக்கிறது. அந்தக் கதாபாத்திரங்களுள் முக்கியமான ஒன்று, கதை நிகழும் களம். பலரும் தவறவிடுவது இங்கேதான்.

பருத்திவீரன்

குறிப்பாக இந்தப் படத்தின் உணர்வுகள் முழுதும், அந்தக் கிராமத்தின் ஆன்மாவோடு இணைந்திருக்கிறது. அந்தக் கிராமம் எனும் கூட்டுச் சமூகம்தான் அவர்களை அப்படி ஆக்கி வைத்திருக்கிறது. அப்படியானால், அதை பார்வையாளர்களின் மனதில் பதியும்படி காட்டிவிடுவது முக்கியமான ஒன்று. அதற்காகத்தான் அந்த 11 நிமிடக் காட்சிகள். எந்த ஒரு விசயத்தைச் சொல்லவும், சினிமாவில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இதே கிராமத்தை ஓரிரு நிமிடங்களில் கூட இன்னும் வலுவாகக் காட்டிவிட முடியும். இங்கே இயக்குநரின் நோக்கம் காட்டுவது மட்டுமல்ல, பார்வையாளர்களையும் அங்கே கொஞ்ச நேரம் வாழவிடுவது. அப்படியானால் முதல் ஷாட்டிலேயே கதை தொடங்கிவிடுகிறது. படம் முழுக்க இந்தத் தொடக்கக்காட்சியைப் போலவே, மதுரை மண்ணின் வெம்மையையும், புழுதிக்காட்டையும், மனிதர்களையும் அப்படியே மிகையின்றிப் பதிவு செய்திருந்தது ராம்ஜியின் ஒளிப்பதிவு நுட்பம்.

பருத்திவீரனாக நடித்திருந்தது கார்த்தி. அவருக்கு இது அறிமுகப்படம். இப்படி ஓர் அறிமுகக் கதாபாத்திரம் எந்த ஒரு நடிகருக்கும் அவ்வளவு எளிதில் அமையாது. அமைந்தாலும், அதைச் சிறப்பாக யாரும் பயன்படுத்திக் கொண்டதுமில்லை.

1952 பராசக்தி படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பிறகு, அப்படியான ஒரு கதாபாத்திரமும், அதற்கான சிறப்பான பங்களிப்பும் கார்த்திக்கு அமைந்தது என்றே சொல்லலாம். கோவையைப் பூர்வீகமாகக் கொண்டு, சென்னையில் பிறந்து வளர்ந்த கார்த்தியின் சொந்த வாழ்க்கையின் பேச்சுமொழியாகவே மதுரை வட்டார வழக்கு மாறிப்போனதாகவும் சொல்லப்படுகிறது. சில பேட்டிகளில் நாமும் அதை உணர்கிறோம். அந்தளவுக்கு இந்தப் படத்துக்காக அவர் உழைத்திருக்கிறார்.

‘பருத்திவீரன்’

முத்தழகுவாக பிரியாமணி நடித்திருந்தார். படம் முழுக்க காதலும், பரிதவிப்புமாக வாழ்ந்திருந்தார். ஒரு காட்சியில், பருத்திவீரனை அவள் காதலிப்பதை அறிந்து, அவளது அப்பா கழுவன் வீட்டுக்கு வந்து ஆவேசமாக அவளை அடித்துத் துவைக்கிறான். இப்படியான டொமஸ்டிக் வயலன்ஸ் இப்போது கிராமங்களில்கூட வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையை, ஒரு சமூகமாக நாம் வந்தடைந்திருக்கிறோம்.

2000-க்கு முன்பான தமிழ்க் கிராமச்சூழலில், ஆண்கள் கையில் கிடைத்தைக் கொண்டு மனைவியை, பெற்ற பிள்ளைகளை முரட்டுத்தனமாகத் தாக்குவது என்பது மிகவும் சகஜமானது. வெயில் படத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல், சினிமாவுக்குப் போன 12 வயதுப் பையனின் கைகால்களைக் கட்டி, நாள் முழுதும் முற்றத்து வெயிலில் போட்டிருப்பான் ஒரு தந்தை. போலவே ஆணோ, பெண்ணோ பிள்ளைகளும் அதை எதிர்கொண்டு நிற்பார்கள்.

ஆனால், இப்படியான காட்சிகள் சினிமாவில் அரிதானவை. முத்தழகு, தன் தந்தை கழுவனை எதிர்கொண்டு போராடும் காட்சி தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிது. அது, பிரியாமணியை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வரை கொண்டுபோனது.

பருத்திவீரனின் சித்தப்பா செவ்வாழையாக சரவணனும், கழுவனாக பொன்வண்ணனும், சில பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வந்தாலும், பொருளாதாரத்துக்கு முன்னால் சாதியெல்லாம் ஒன்றுமேயில்லை எனும் உண்மையை உரக்கச் சொல்லும் மருது கதாபாத்திரத்தில் சம்பத்தும் நடித்திருந்தார்கள்.

இசை யுவன்ஷங்கர் ராஜா. சிநேகன் எழுதி மாணிக்கவிநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடிய ‘அய்யய்யோ என் உசுருக்குள்ள’, இளையராஜா பாடிய ’அரியாத வயசு’ பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. பின்னணி இசையிலும் மதுரையின் வெக்கையை உணரக்கொடுத்திருந்தார் யுவன்.

இந்தப் படத்தை தயாரிக்கத் தொடங்கியது ஸ்டுடியோகிரீன் நிறுவனத்துக்காக கே.இ.ஞானவேல் ராஜா. பின்னர் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மற்றும் தயாரிப்புச் செலவுகள் காரணமாக பாதியில் அவர் கைவிட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டுடியோகிரீன் நிறுவனம பின்னர் சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பின்னரும்கூட அமீருடன் ஏற்பட்ட பிரச்சினைகளை, படம் வெளியாகி 20 ஆண்டுகளான பின்பும் இன்றுவரை தீர்த்துக்கொள்ள இயலாதிருப்பதும் வியப்பளிக்கிறது. எது எப்படியோ ஸ்டுடியோகிரீன் வழங்கும் என்ற கார்டு வருகிறதே தவிர, தயாரிப்பாளர் பெயரின் கார்டு போடப்படாமல் வெளியான ஒரே தமிழ்ப்படமாகவும் இது இருக்கலாம்.

பருத்திவீரன்

மௌனம் பேசியதே, ராம் படங்களைத் தொடர்ந்து அமீர் எழுதி இயக்கிய மூன்றாவது படம் இது. இந்தப் படத்தில் அவர் தாண்டிய உயரம் அவருக்கே அத்தனைப் பெரிதாக அமைந்துவிட்டதோ என்னவோ, 2007-ல் வெளியான பருத்திவீரனுக்குப் பிறகு இன்றுவரை, யாருக்கும் தெரியாமல் வந்துபோன ஆதிபகவன் எனும் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார்.

அன்று மிகவும் அதிர்ச்சிக்குரிய முடிவாகப் பார்க்கப்பட்ட இதன் கிளைமாக்ஸ் இன்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. லாரி ஓட்டுநர்கள் இரவில் விலைமகளிரோடு ஒதுங்கும்போது அவர்களை மறித்து, அந்தப் பெண்களைப் பறித்துச் செல்வது பருத்திவீரனின் வழக்கம். அதற்கு ஈடாக கிளைமாக்ஸில், அந்த லாரி டிரைவர்களால் முத்தழகு வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதாக அமைக்கப்பட்டிருந்தது கிளைமாக்ஸ். இதுவொரு பொயடிக் ஜஸ்டிஸ் என்று அன்று பல விமர்சகர்களால் சொல்லப்பட்டது. ’நீ செய்த பாவம் என் மீது விடிந்துவிட்டது’ என்று முத்தழகு, பருத்திவீரனைப் பார்த்துச் சொல்லும் வசனத்தை வைத்ததன் மூலமாக இயக்குநரும், பார்வையாளர்களை அந்த முடிவை நோக்கித்தான் செலுத்துகிறார் என்றே கொள்ளலாம்.

ஆனால், இதில் பொயட்டிக்கும் இல்லை, ஜஸ்டிஸும் இல்லை என்பது என் கருத்து. பருத்திவீரனைக் காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் முத்தழகு செய்துவிடவில்லை. அவள் காதலைவிடவும் மதிப்புமிக்க உணர்வான செய்நன்றியையும் கொண்டிருக்கிறாள். அப்படியான ஒரு பெண் எப்படி பாதிக்கப்படமுடியும்? ஒருவர் செய்யும் செயலுக்கான தீர்ப்பை இன்னொருவருக்கு நாம் தரமுடியாது. இல்லை, பெண்கள், ஆண்களின் உடமைகள் எனும் உயர்ந்த சித்தாந்தத்திலிருந்து இந்தக் கதையை நாம் அணுகிட வேண்டும், முத்தழகுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது, உண்மையில் பருத்திவீரனுக்கானது என்ற கோணத்தில் பார்த்தாலும் அதில் நீதியில்லை.

அந்த லாரி டிரைவர்களுக்கும் இந்தக் கதையில் ஒரு பங்கு தரப்பட்டு, அவர்களது குணநலன்களும் விவரிக்கப்பட்டிருந்தால் அது வேறு. ஆனால், அவர்கள் நம்மைப்போல அந்தக் கிராமத்தைக் கடந்து செல்லும் சாதாரண மனிதர்களாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சைகோக்கள் அல்ல. அவர்கள் உடல் தேவைக்காக விலைமகளிடம் போயிருக்கலாம். ஏற்றுக்கொள்ளவே முடியாது எனினும் அதிகபட்ச குற்றமாக ஒரு பெண்ணை வன்புணர்வுகூட செய்திருக்கலாம்.

ஆனால், அப்படியான சாதாரண மனிதர்கள், தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற முனையாமல், இரக்கமின்றி அவளை வன்புணர்வு செய்வார்கள் என்று காட்டப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இது சமூகத்தின் மீதான, சக மனிதர்கள் மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் செயல். போலவே, அவனுக்காகத் தருவதற்காகவே அவள் பாதுகாத்து வைத்திருந்த கற்பே இங்கே களங்கப்பட்டுவிட்டது என்ற பே-ஆஃப் முடிவைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாலும், அது முதிர்ச்சியற்ற சிந்தனையாகவே பார்க்கப்படும்.

வன்புணர்வுக்காளக்கப்பட்ட முத்தழகுவின் உயிரைக் காப்பாற்றி, ’உன் கற்பைத் தூக்கிக் குப்பையிலே போடு, உன் அன்பைவிட அதுவொன்றும் முக்கியமில்லை’ என்று பருத்திவீரன் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு பேட்டியில் அமீர், ‘அவன் செய்த குற்றங்களுக்காக, அவன் நெடுநாள் சிறைவாசியாக சிறைக்குச் செல்கிறான். அவன் விளையாட்டாக ஆசைப்பட்டதும்கூட அதைத்தான். ஆனால், இப்போது இருவரின் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு அவன் சிறைக்குச் செல்வதன் வலி அவனுக்குப் புரிந்திருக்கும். அவனுக்காக முத்தழகு காத்திருப்பாள் என்று கூட ஒரு முடிவைச் சிந்தித்தோம். ஆனால், அதை 16 வயதினிலே உட்பட பல படங்களில் பார்த்துவிட்டோம்’. என்று சொல்கிறார்.

இயக்குநர் அமீர்

எத்தனைப் படங்களில் பார்த்துவிட்டாலும், அதுவேதான் இந்தப் படத்துக்கான சரியான முடிவு. அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவோ அல்லது முதிர்ச்சியற்ற சிந்தனையின் விளைவாகவோ காட்சிகளை அமைத்தால் அவை இப்படித்தான் காலத்தின் முன்பாக பட்டுப்போகும். போலவே, இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே எல்ஜிபிடிக்யூ (LGBTQ) பற்றிய பெரும் விழிப்புணர்வு மலரத்தொடங்கிவிட்ட நிலையில், இந்தப் படத்தில் அவர்களைக் காட்சிப் படுத்தியிருந்த விதமும், திருநங்கையரைப் பற்றிய பாடலும் ஏற்கமுடியாதது.

சில படங்களும், சில படங்களின் குறிப்பிட்ட சில காட்சிகளும் காலத்தால் பின் தங்கிப் போய்விடுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதுவே சமூக சிந்தனை வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. அப்படி இந்தப் படத்திலிருந்து, சில காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், தமிழ்க் கிராமங்கள் குறித்த அசலான பதிவாக என்றைக்கும் நிலைத்து நிற்பான் பருத்திவீரன்.!

(தொடரும்)

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed