பாலிவுட் திரை நடத்திரத்தில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். கடந்த 2000-ம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான ‘ரெஃப்யூஜி’ (Refugee) திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகத் தனது 19-வது வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். தற்போது, மேக்னா குல்சார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘தாயரா’ (Daayra) என்ற குற்றவியல் திரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பாடல்களே இல்லாத இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாட்காஸ்டர் ஹனுமான் தாஸ் என்பவருக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தபோதிலும், 11-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். படிப்பை பாதியில் கைவிட்டது என் வாழ்க்கையில் என்றும் ஆறாத ஒரு வருத்தமாகவே இருந்து வருகிறது. நான் படிப்பை முடிக்காததை சிலர் கிண்டல் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நடிகையாக என்னை நிருபிக்க வேண்டும் என்பதே எனது அன்றைய லட்சியமாக இருந்தது.
நான் செய்த இந்தத் தவறை எனது மகன்களான தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோர் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது மகன்கள் இருவரும் முதலில் தங்களது படிப்பை முழுமையாக முடித்த பிறகே, அவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். எனது சொந்த அனுபவமே ‘யுனிசெஃப்’ (UNICEF) அமைப்புடன் இணைந்து பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்ற தூண்டுகோலாக அமைந்தது.” என்றார்.
பெண் கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகை கரீனா கபூர், 2014-ம் ஆண்டு முதல் யுனிசெஃப் இந்தியா அமைப்பின் தூதராகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
























