காவிரி: கர்நாடக விவசாயிகளும் விரும்பும் அணை; ராசிமணலே தீர்வு! - போராடத் தயாராகும் விவசாயிகள்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும், ஏதாவதொரு காரணத்தைக் கூறி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் தருவதில் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு, பருவமழைக் காலங்களில் மட்டும் தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துகிறது.

இந்நிலையில்தான் ராசிமணல் அணை கோரிக்கை தமிழக  விவசாயிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. 

தமிழக எல்லைக்குள் காவிரி நுழையும் தருமபுரி மாவட்டத்திலுள்ள்  பிலிகுண்டுலுவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் அமைந்துள்ளது ராசிமணல். இங்கு காமராஜர் முதல்வராக இருந்தபோது அறிவித்த அணைத் திட்டத்தைதான் அதற்குப்பின் வந்த அரசுகள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

ராசிமணலை பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினர்

சமீபத்தில் வனத்துறையினரின் கெடுபிடியைத் தாண்டி ராசிமணல் பகுதிக்கு விவசாயப் பிரதிநிதிகளுடன் சென்று வந்துள்ள ‘தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு’த் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது,

 “மேகதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்குதான் பயன் அளிக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் கூறியிருக்கிறார். மேகதாட்டில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல, கர்நாடக விவசாயிகளும் அழிந்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. காரணம், மேகதாட்டு அணையை கர்நாடக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.

விவசாயக் குழுவினர்

அதேநேரம், இரண்டு மாநில விவசாயிகளும் ஒப்புக்கொண்ட ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முன்வரலாம். கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை கட்ட 1961-ல் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். அதறகுப்பின் அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்தபோது சில அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து காரைக்கால் வரை காவிரிப்பாசனப் பகுதிகளை பார்வையிட்ட கர்நாடக விவசாயப் பிரதிநிதிகள், ராசிமணல் பகுதியையும் பார்த்ததற்குபின்பு தமிழக விவசாயப் பிரதிநிதிகளை மைசூருக்கு அழைத்து அங்குள்ள 250 விவசாயப் பிரதிநிதிகளுடன் பேச வைத்தார்கள். அப்போது ‘மேகதாட்டில் அணை கட்டினால், கிருஷ்ணராஜ அணையில் தண்ணீர் தேக்க மாட்டார்கள், இதனால் பெரும்பாலான கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், அடர்ந்த வனப்பகுதியாகவும் புலிகள், யானைகள் சரணாலயமாகத் திகழும் கனகபுரா பகுதியில் அர்காவதி ஆறும் காவிரியும் சங்கமமாகும் இடத்தில் அணையை கட்டினால் இயற்கை அழிக்கப்படும்.

அதற்கு மாற்றாக ராசிமணலில்  தமிழக அரசு அணை கட்டினால் காவிரியின் இடது கரையை தமிழகமும், வலது கரையை கர்நாடகாவும் பிரச்சனை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து அன்றைய முதலமைச்சர் சித்தராமையாவிடம் தெரிவித்தனர். நாங்களும் அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த துரைமுருகனுடன் ஆலோசித்து எங்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுத்தார். அதற்குப்பின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ராசிமணல் அணைக்காக எட்டு ஆண்டுகளுக்கு மும் பாமக நடத்திய ஆர்பாட்டம்

கர்நாடக விவசாயிகள் எதிர்க்கும் மேகதாட்டு அணையை கொண்டுவர டி.கே.சிவகுமார் முயற்சிக்கும்போது, இரண்டு மாநில விவசாயிகளும் விரும்பும் ராசிமணல் அணைத் திட்டத்தை தமிழக அரசு ஏன் தொடங்க கூடாது? தென்னிந்திய முதலமைச்சர் மாநாட்டில் நீராதார பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது என்று முடிவெடுத்தாக கூறியுள்ள அமித் ஷாவின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை, அங்கு பேசப்பட்டது குறித்து தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கும் அரசு ராசிமணல் திட்டத்துக்கும் நிதி ஒதுக்குவதன் மூலம் காவிரி நீர் பங்கீட்டில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதோடு கடலுக்கு செல்லும் உபரி நீரில் 64 டி.எம்.சி நீரை சேமிக்கலாம், இது குறித்து மீண்டும் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து ஒகேனக்கலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

தருமபுரி மாவட்ட பா.ம.க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-மான வெங்கடேஷ்வரனிடம் பேசியபோது, “தமிழகத்தின் பல்வேறு நீர்மேலாண்மை திட்டங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பா.ம.க-தான். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ராசிமணலில் அணை கட்ட வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். தருமபுரி மாவட்டத்தில் பாசன வசதி பெறும் அளவிற்கு எந்த நீர்த்தேக்கமும் இல்லை. நிலத்தடி நீரும் பாதாளத்துக்கு போய்விட்டது.  விவசாயத்துக்கு உதவும் வகையில் காவிரியாற்றில் செல்லும் மழைக்கால உபரிநீரை நீரேற்று பம்பு மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதேபோல், முன்னாள் முதல்வர் காமராஜர் திட்டமிட்ட ராசிமணலில் அணை கட்டவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், அரசுதான் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

வெங்கடேஷ்வரன்

இதுகுறித்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட உயர் அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழக அரசு அறிவிக்காத திட்டம் குறித்து விளக்கம் அளிப்பது முறையல்ல என்றாலும், 60 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டதாக சொல்லப்படும் ராசிமணல் அணை திட்டத்தை தற்போதைய நிலையில் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் அதிகம். முக்கியமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மீறி காவிரியில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது. அடுத்ததாக ராசிமணல் பகுதி முழுக்க பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அங்கு எந்தப்பணியையும் தொடங்க முடியாது. அது மட்டுமின்றி ராசிமணலில் அணை கட்டினாலும் போதுமான அளவு தண்ணீரை சேமிக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால்தான் அரசு அத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை, இதே காரணங்கள் மேகதாட்டு அணை முயற்சிக்கும் உண்டு, அதனால் அவர்களும் அணை கட்ட முடியாது” என்றனர்.

  தற்போது ராசிமணல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று  முதல்வரையும், நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட உள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Работаю врачом в частной клинике. Врач может консультировать пациента удалённо. ЕМИАС — теперь мы проводим предрейсовые медосмотры водителей онлайн. Особенно…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports