மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி கேட்ட பெண்ணை அடித்த பா.ஜ.க.வினர்:

திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் தொகுதியில் உள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் பா.ஜ.க.வினர் நேற்று அவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் கடை வைத்துள்ள பெண் வியாபாரி சங்கீதா என்பவர், நாப்கினுக்கு கூட ஜி.எஸ்.டி. வரி போடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சூழலில், அவரது கடைக்கு நேற்று இரவு பா.ஜ.க.வினர் கும்பலாக சென்று தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரை தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபாச வார்த்தைகளால் மிரட்டல்:

அந்த வீடியோவில், அந்த பெண்மணியின் கடைக்குள் புகுந்த பா.ஜ.க.வினர் ஏன் வண்டியை மறித்து ஜி.எஸ்.டி. பற்றி கேட்கிறாய்? என்று ஒருவர் கேட்கிறார். அப்போது, பா.ஜ,க.வைச் சேர்ந்த வயதான ஒருவர் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை தாக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தை அந்த பெண் வீடியோவாக எடுத்தார். மேலும், அப்போது அந்த பெண் ஆத்துப்பாளையம் பகுதியில் ஜி.எஸ்.டி. பற்றி கேள்வி கேட்டதற்காக கை வைக்கிறார்கள் என வேதனையுடன் பேசியுள்ளார்.

மேலும், அந்த பெண் வீடியோ எடுக்கும்போது வீடியோ எல்லாம் எடுக்காதீங்க என்று மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பா.ஜ,க.வினர் பலரும் தாக்க முயற்சிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடந்தது என்ன?

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பா.ஜ.க.வில் ஓட்டு கேட்டு வந்தனர். இரண்டே பேர்தான் வந்தார்கள். டிரைவருடன் ஒரு அண்ணா மைக்கில் பேசிக் கொண்டு வந்தார். பெண் உரிமைகள் பற்றி பேசினார்கள். அப்போது, நான் பெண்களின் உரிமைக்காக பேசுகிறீர்கள். ஆனால், பெண்களுக்கான நாப்கினுக்கு கூட ஜி.எஸ்.டி. போட்ருக்கீங்க. பெண்கள் சமைக்கும் எல்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. போட்ருக்கீங்க என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் பணம் நிறைய வந்தா நீங்க எல்லாம் வாங்கிக்கலாம் என்றனர். அதன்பின்பு, அங்கிருந்த மக்கள் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டனர். நான் முதலில் கேட்டபிறகு ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர். பிறகு நான் கடைக்கு வந்துவிட்டேன்.

நான் வந்த பிறகு, கடைக்குள் 10 பேர் நுழைந்தனர். அதில் 2 பேர் என்னை அடித்தனர். சின்னசாமி என்ற பெரியவர் என்னை அடித்தார். நான் பேசியதை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை அடிக்க வந்தனர். இதுதான் பெண்களுக்கான உரிமையை தருவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.