தசாவதாரம் : தொழில்நுட்ப சாகசம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 18


சினிமாவின் தேவை என்ன? அதன் நோக்கம் என்ன? ஒரு சினிமா நமக்கு என்ன தருகிறது?

முதலாவதும் முக்கியமானதும் ஆவது பொழுதுபோக்கு (Entertainment). பொழுதுபோக்கு என்பதை விடவும், எண்டர்டெயின்மெண்ட் எனும் சொல்லுக்கு கேளிக்கை என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. உணவு, உறக்கம், உறவுக்குப் பின்னர் அவனது முக்கியமான தேவை கேளிக்கை. அதனால்தான் மனிதன் கலைகளிலும், விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான். மன அழுத்தம் தரக்கூடிய இந்த வாழ்வின் சுமைகளைக் கொஞ்ச நேரம் மறக்கவைத்து, அவனை இளைப்பாற வைப்பதும், மனம் மகிழச்செய்வதும் கலைகளின் பொறுப்பு. அதுவேதான் சினிமாவின் பொறுப்பும். அந்தக் கேளிக்கைகளுக்கூடாகவே மனித உணர்வுகளையும், சிந்தனைகளையும், வரலாற்றுத் தகவல்களையும், அரசியல்-சமூக விமர்சனக் கண்ணோட்டங்களையும் நமக்குத் தருகின்றன சினிமாக்கள். அதே நேரம் கேளிக்கைதான் அவற்றின் அடிப்படை.

தசாவதாரம்

அப்படி வியப்பூட்டும் கேளிக்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டும் படங்கள் உருவாகிகொண்டேதான் இருக்கின்றன. ஸ்டார்வார்ஸ், ஜுராஸிக் பார்க், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், கிங்காங், அவதார் போன்ற படங்களில் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் ஆதாரமான கதை இருந்தாலுமே, அவற்றின் முதன்மையான நோக்கம் பார்வையாளர்களை வியப்பூட்டுவது. சினிமா எனும் மேஜிக்கல் தொழில்நுட்பத்தால் என்னெவெல்லாம் செய்து காண்பிக்க முடியும் என்ற சவாலைக் கையாண்ட படங்கள் அவை. பஸ்டர் கீட்டனில் ஆரம்பித்து சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இந்த முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில்தான் தசாவதாரத்தையும் நாம் வைத்துப் பார்த்திட முடியும்.

கமல்ஹாசன் ஏற்கனவே இப்படியான சினிமாக்களை முயற்சித்து அதில் பெரிய வெற்றிகளையும் பதிவு செய்திருக்கிறார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களும் இந்த வகைமைக்குள்தான் வரும். ஒரு எளிய கதைக்குள் பிராஸ்தடிக் மேக்கப், சிஜிஐ தொழில்நுட்பம், கிரீன்ஸ்கிரீன் மற்றும் மோஷன் கண்ட்ரோல் கேமராவின் உச்சப்பயன்பாடு, அவற்றின் பல அடுக்குகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து பார்வையாளனை வியக்கச் (Wonder / Spectacle) செய்யமுடிகிறதா என்று முயற்சிப்பதுதான் இவ்வகைப் படங்களின் நோக்கம். இந்தப் படத்திலும் கமல்ஹாசனால் அதை வெற்றிகரமாகப் செய்யமுடிந்திருந்தது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருந்தவர் கமல்ஹாசன். தேவர்மகன், குருதிப்புனல், மகாநதி, ஹேராம், விருமாண்டி என தமிழ் சினிமாவின் பல சிறந்த திரைக்கதைகளை எழுதியவர் கமல்ஹாசன். திரைக்கதை எழுத்தைப் பொறுத்தவரை தேவர்மகன், அடுத்த தலைமுறை இயக்குநர்களை மிகப்பெரிய அளவில் பாதித்த ஒரு திரைக்கதையாகத் திகழ்கிறது. ஆனால் அப்படிப்பட்டவர்தான், முழுவதும் தற்செயல் நிகழ்வுகளால் கோர்க்கப்பட்டிருந்த இந்த தசாவதாரம் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

ஒரு சிறப்பான திரைக்கதை இப்படி இருக்கமுடியுமா எனும் கேள்வி எழும் அதே நேரம், கதையின் நோக்கம் வேறு என்பதும் நமக்குப் புரிகிறது! பத்து கதாபாத்திரங்களை ஒன்றிணைப்பது எனும் மிகப்பெரிய இலக்கை அடைய, இதை விட்டால் வேறு வழியுமில்லை. ஆனாலும், இந்தச் சிக்கலை மறைக்க, படம் முழுதும் வைணவப் புராணங்களோடு இணைந்த குறியீடுகளால் பல அடுக்குகளையும், விறுவிறுப்பான காட்சியமைப்புகளையும், ஃப்ளெட்சர்- பிராட்வே குமார் காம்போ, பல்ராம் நாயுடு – அப்பா ராவ் காம்போ என சுவாரசியமான கதாபாத்திரங்களையும் உருவாக்கி திரைக்கதையை விறுவிறுவென குறைகள் தெரியாமல் ஓடவிட்டிருந்தார். கோவிந்தின் கதாபாத்திரம் மூலமாக கமல் தன்னியல்பில் பகுத்தறிவு பேச முயற்சித்திருந்தாலும், ஒரு நேரடி பக்திப் படமாகத்தான் கடைசியில் தசாவதாரம் அமைந்திருந்தது.

கோவிந்த் எனும் ஓர் இந்திய விஞ்ஞானி, உயிரி ஆயுதமாகப் பயன்படக்கூடிய ஒரு செயற்கை வைரஸை உருவாக்கும் அமெரிக்கக் ஆய்வுக்குழுவில் பணிபுரிகிறான். அவனது மேலதிகாரி அந்த வைரஸை தீவிரவாதிகளுக்கு விற்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து, அதை எடுத்துக்கொண்டு தப்புகிறான். ஆனால், அப்போது நடக்கும் குழப்பத்தில் அந்த ஆபத்தான வைரஸ் அடங்கிய குப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. அதைத் தேடி கோவிந்தும், அவனைப் பின் தொடர்ந்து வந்து அதை மீட்க முற்படும் கூலிப்படையினரான ஃப்ளெட்சரும் இந்தியாவுக்கு வருகின்றனர். குப்பி யார் கைகளில் கிடைத்தது, இறுதியில் என்னவாயிற்று என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் பிரதானமான இரு கதாபாத்திரங்களோடு, குப்பி சென்று சேரும் சிதம்பரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி பாட்டி, தன் தங்கையின் மரணத்துக்காக பழிவாங்க ஃப்ளெட்சரைப் பின் தொடரும் ஷிங்கென் எனும் ஜப்பானிய வீரன், இந்த வழக்கைத் துப்பறியும் பல்ராம் நாயுடு எனும் ரா ஏஜெண்ட் போன்ற முக்கியமான பாத்திரங்களிலும், கிளைக்கதைகளில் வரும் சமூகப்போராளி பூவராகன், பாடகர் அவதார் சிங், கலிஃபுல்லா கான் ஆகிய பாத்திரங்களிலும், ரங்கராஜ நம்பி எனும் பன்னிரண்டாம் நூற்றாண்டு கதாபாத்திரம் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என மொத்தம் 10 கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் கமல்ஹாசன்.

மேக்கப் மட்டுமின்றி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு உடலமைப்பு, உடல்மொழி, மனநிலை மற்றும் தனித்துவமான குரலமைப்பு என கமல் தன் ஈடுபாட்டையும், உழைப்பையும் முழுமையாகக் கொட்டியிருந்தார்.

ரங்கராஜ நம்பியின் மனைவியாகவும், கோவிந்தின் காதலியாகவும் அசின் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். கலிஃபுல்லாவின் தந்தையாக நடித்திருந்த பழம்பெரும் நடிகர் நாகேஷுக்கு இதுவே கடைசி படமாக அமைந்துவிட்டது. மேலும், நெப்போலியன், ரகுராம், ஜெயப்ரதா, மல்லிகா ஷெராவத், ரேகா, பி.வாசு. எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி என பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் ஒரு சுனாமியாக இந்தப் படத்தில் வெளிப்பட்டதால், அசின், நெப்போலியன் தவிர்த்த பிற நடிகர்களுக்கான ஸ்கோப் மிகவும் குறைந்துபோய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர், ரவிவர்மன். 1999-ல் மலையாளத்தில் தொடங்கிய இவரது ஒளிப்பதிவுப் பயணம், தமிழ், தெலுங்கு, இந்தி என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஒளிப்பதிவாளர் இடத்திலேயே இவரை வைத்துக்கொண்டிருக்கிறது. ஆளவந்தான் படத்தின் ஜெயில் சந்திப்புக் காட்சி மற்றும் அதன் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மோஷன் கண்ட்ரோல்ட் கேமரா பயன்படுத்தப்பட்டதே, ஒரு தொழில்நுட்பப் பாய்ச்சலாகக் கருதப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கமல் வரும் அத்தனைக் காட்சிகளிலுமே அந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

நடிப்பு, இயக்கம் போலவே ஒளிப்பதிவுக்காகவும் இந்தப் படத்துக்கு, ஓர் அசுரத்தனமான உழைப்பு தேவைப்பட்டிருந்தது. அதைச் செவ்வனே செய்திருந்தார் ரவிவர்மன். இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளை பிரையன் எம் ஜென்னிங்ஸும், பல காட்சியடுக்குகளை பிசிறின்றி இணைக்கும் மிக முக்கியமான டி.ஐ பணிகளைச் சென்னையைச் சேர்ந்த பிரைம் போகஸ் நிறுவனமும் செய்திருந்தார்கள்.

படத்தின் இசையமைப்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஆனால், இப்படியொரு படத்தின் தயாரிப்பு என்பது திட்டமிட்டபடி நடக்காமல், அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது இயல்புதான். அதனால் அவர் இதிலிருந்து விலக நேர்ந்தது. அதன் பின்னர், பின்னணி இசைக்காக தேவிஸ்ரீ பிரசாத்தும், பாடல்களுக்காக ஹிமேஷ் ரேஷமையாவும் உள்ளே வந்தனர். பிரதானமாக ஓர் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்த படத்துக்குப் பொருத்தமான விறுவிறுப்பான பின்னணி இசையமைப்பைக் கொடுத்திருந்தார் டிஎஸ்பி. ரங்கராஜ நம்பி மற்றும் கோவிந்த் இருவரையும் ஒரு பொது தீம் இசையால் இணைத்தார். ப்ளெட்ச்சர் மற்றும் பல்ராம் நாயுடு போன்ற கதாபாத்திரங்களுக்கு அவர்களின் குணத்துக்கேற்ற தனித்தனி தீம் இசையமைப்புகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். இந்தி சினிமாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளரான ஹிமேஷ் ரேஷமையாவுக்கு தமிழில் இது முதல் படம். வாலி எழுதி, ஹரிஹரன் பாடிய, ’கல்லை மட்டும் கண்டால்’, ஷ்ரேயா கோஷல் பாடிய, ‘முகுந்தா முகுந்தா’ போன்ற பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்தன.

படத்தைத் தயாரித்திருந்தது ஆஸ்கர் பிலிம்ஸுக்காக வி.ரவிச்சந்திரன். படத்தை இயக்கியிருந்தவர் கே.எஸ்.ரவிகுமார். முன்னதாக இந்தப் படத்தை இயக்க சிலரை அணுகியதாகவும், அவர்கள் இதை ஒரு சாத்தியமற்றப் படமாகக் கருதி விலகியதையும் கமல்ஹாசனே குறிப்பிட்டிருக்கிறார். கமல்ஹாசன் போல ஒரு முழுமையை எதிர்பார்க்கும் ஒரு கலைஞனை வைத்துக்கொண்டு, இப்படியொரு பிரம்மாண்டமான படைப்பை கமர்ஷியலாகச் சாத்தியப்படுத்துவது உண்மையில் மிகச் சவாலான காரியம்தான். அதை கே.எஸ்.ரவிக்குமாரைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! கதையையும், ஒவ்வொரு காட்சியையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, மிகப்பெரிய உழைப்பையும், கவனத்தையும், ஈடுபாட்டையும் இயக்குநர் செலுத்தியிருந்தார்.

தொடங்கிய இடத்திலிருந்து இறுதிவரை, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல இலக்கை நோக்கியே தீவிரமாகப் பயணிக்கும் ஃப்ளெட்ச்சர் கேரக்டர் உட்பட பல கதாபாத்திரங்களைப் பற்றிப் பேச நிறைய இருந்தாலும், நம் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவராக பல்ராம் நாயுடுவே இருக்கிறார். தோற்றமும், பேச்சும் சற்றே அலட்சியமாகவும், காமெடியாகவும் இருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு ரா ஏஜெண்டாக தனக்குத் தரப்பட்ட வழக்கில், பொறுப்பாகவும் மிகச் சரியான கோணத்திலும் காரியமே கண்ணாகப் பயணித்துக்கொண்டிருப்பார் பல்ராம்.

பல்ராமின் பேச்சு, செயல் என அனைத்து நுணுக்கங்களையும் ரசிப்பதே தனிச்சுவைதான். அறிமுகமாகும் முதல் காட்சியில் ஏர்போர்ட் ஊழியர் ஸ்ரீநிவாசன் என்று பெயரைச் சொன்னதுமே அவர் தெலுங்கு என்று கண்டுபிடித்து, அவரது முகம் நெகிழ்ச்சியாகும். ஆங்கிலத்தில் பேசும் கோவிந்தை, ‘டெபுடேசன்லோ தமில்நாட்டுக்கு வந்து தமில் கத்துக்கிட்டு இவ்லோ நல்லா பேசறேன். ஆனா நீ தஞ்சாவூரூ, இங்கிலிஸுல பேசற, பின்ன எப்டிய்யா தமில் வாலும்?’ என்று கலாய்ப்பார்.

வைரஸ் குப்பியைக் காணாமல், ‘அந்த வயலு இந்த கண்டய்னர்லோ இல்ல, உள்ளுக்கு ஷாப்டுருப்பியோனு யோசிச்சிப்பாத்தா, அது கிரிமி, இந்நேரத்துக்கு அட்லீஸ்ட் பேதியாச்சும் ஆகியிருக்கும், ஆவல்ல’ என்று எட்டிப் பார்ப்பார். இப்படி ஒவ்வொரு நுணுக்கமும் ‘சபாஷ் நாயுடு’ எனும் ஒரு ஸ்பின் ஆஃப் படம் உருவாகும் அளவுக்கு அத்தனை ரசனையாக ஆக்கப்பட்டிருந்தது அந்தக் கதாபாத்திரம். சபாஷ் நாயுடு உருவாக முடியாமல் போனாலும், பல்ராம் நாயுடு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாகவே நம் மனதோடு தங்கிவிட்டார்.

சினிமா என்பது எப்போதும் வாழ்க்கையையும், மனிதர்களையும் பிரதிபலிக்கும் ஒரு கலை மட்டுமேயல்ல, வியப்பூட்டும் மாயாஜாலமும் கூட என்பதை நிரூபித்த படங்களுள் தசாவதாரத்துக்கு ஓரிடம் எப்போதுமிருக்கும்.

For me, the cinema is not a slice of life, but a piece of cake.- Alfred Hitchcock.

(தொடரும்)



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Завітайте на сайт https://xata.od.ua. Займаєтесь будівництвом, ремонтом або просто фермерством? Блог Українська Хата розповість актуальну інформацію про теми: будинок, затишок,…

  2. На сайті знайдете https://meatportal.com.ua знайдете: рецепти, поради домогосподаркам, кулінарні лайфхаки. Готуйте смачно, швидко і легко. Про сучасну кулінарію розповідає блог…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed