வேலூர் அருகேயுள்ள காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59). இவர், பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர், அரூர் வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்குப் பணிக்குவந்த வெங்கடசாமி பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கிக் கொண்டு புறப்பட்டார்.
குடியாத்தம் வருவதற்குள்ளாக பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்திருக்கின்றனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலின் புதிய தரைப்பாலம் அருகிலுள்ள நிறுத்தத்ததில் 2 பேர் இறங்குவதற்காக எழுந்ததால் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, வெங்கடசாமிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பேருந்தின் இயக்கம் குறைந்ததால் கடுமையான நெஞ்சுவலியிலும் சாதுர்யமாகச் செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.

அடுத்த நொடி அப்படியே ஸ்டியரிங் மீது சாய்ந்து மயக்கமடைந்தார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், `ஓட்டுநருக்கு என்ன ஆனது?’ என்று பதறிப்போன பயணிகள் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் உடனே குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அனுமதித்தனர்.
அங்கு பணியில் இருந்த 3 மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்தபோதும், ஓட்டுநர் வெங்கடசாமியைக் காப்பற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக, குடியாத்தம் நகரக் காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய தருணம், சக போக்குவரத்து பணியாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்கலங்க வைத்திருக்கிறது.
























