ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு.
அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது… உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!” என்று பதிவிட்டிருக்கிறார் சீமான்.
























