சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் செப்.5-ம் தேதி இரவு 9 மணி அளவில் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், அடையாறு துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி! நேற்றிரவு சென்னை அடையாறு அருகே, தவெக நிர்வாகியான கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற interior கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படியிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
























