இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஆன்மீகவாதி சத்குரு. இவரது ஆன்மீக சொற்பொழிவு இவரது பக்தர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில், இவர் பெண்களை பற்றி அவதூறாக பேசுபவர்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
கண்ணோட்டத்தை மாற்றுங்கள்:
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், ”கடந்த இரண்டு வாரங்களில் அரசியல் விவாதங்களில் பெண்களைப் பற்றி பேசப்படும் வார்த்தைகளில் ரேட் கார்டு (தரம்) அவர்களது பெற்றோர்கள் பற்றிய கேள்விகள், அருவருக்கத்தக்க வகையில் 75 வயது பெண் பற்றிய கருத்துக்களை பார்த்தேன். என்னதான் கிடைக்கும் நமக்கு? இதுபோன்று அவதூறாக பேசுபவர்கள் தொலைக்காட்சியில் வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வருகிறார்கள். ஊடகங்களுக்கும், சமூக வலைதள பிரபலங்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.இதுபோன்ற நபர்களை தவிருங்கள். பெண்களை பற்றிய நமது பார்வையை கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். சில சமயங்களில் சில அரசியல்வாதிகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி தங்களது எதிர்க்கட்சி தரப்பினரை விமர்சித்து வருகின்றனர். சிலர் பெண் தலைவர்களையும் அவதூறாக பேசி வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இதுபோன்ற அவதூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சத்குரு இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். சத்குருவின் இந்த வீடியோவிற்கு கீழே அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் காண