Congress Rahul Gandhi: ராகுல் காந்தியின் நடைபயணத்திற்காக காங்கிரஸ் கட்சி செலவிடும் தொகை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கான செலவு:
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பயணத்திற்காக காங்கிரஸ் கட்சி நாள் ஒன்றிற்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளதாக, கட்சி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வரவு – செலவு:
இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸின் வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, 2022-23 ஆம் ஆண்டில் அதன் மொத்த வருமானமான ரூ.452 கோடிக்கு எதிராக, ரூ.467 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் செலவாக ரூ.192 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகள் என்பதன் கீழ் கணக்கிட்டால், பாரத் ஜோடோ யாத்திரைக்கு ரூ.71.83 கோடி செலவிடப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டு ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. மொத்தமாக 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தில் கிட்டத்தட்ட 4,500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த செலவினங்கள்:
அரசியல் கட்சிகள் நிதிக் கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிதிக்கான பங்களிப்புகள், தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்குகள் மற்றும் தேர்தல் செலவு அறிக்கைகள் அதில் அடங்கும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2022-23ல் ‘நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகள்’ கீழ் காங்கிரஸ் கட்சியின் செலவு 2.6 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், 2021-22 மற்றும் 2022-23க்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த செலவு ரூ.400 கோடியிலிருந்து ரூ.467 கோடியாக உயர்ந்துள்ளது. மறுபுறம், கட்சியின் வருமானம் 2021-22ல் ரூ.541 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.452 கோடியாக குறைந்துள்ளது. கட்சிக்கான நன்கொடைகள், மானியங்கள் மற்றும் நன்கொடைகள் கணிசமாக சுமார் ரூ.80 கோடி குறைந்துள்ளன. அதன்படி, 2021-22ல் ரூ.347 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.268 கோடியாக குறைந்துள்ளது.
பாரத் நியாய யாத்திரை:
ராகுல் காந்தி தற்போது பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது. ஜனவரி 27 அன்று, தங்களது நடைபயணத்திற்கு நிதியளிக்கும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியது. இந்த முயற்சியின் கீழ், நடைபயணத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பல தனிநபர்கள் ஒரு கிலோமீட்டருக்கு ரூ 20 முதல் ரூ 100 வரை ராகுல் காந்திக்கு நன்கொடை அளித்துள்ளனர். இது ரூ.1.34 லட்சம் முதல் ரூ.6.70 லட்சம் வரை இருந்தது. நான்கு நாட்களில் காங்கிரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.
மேலும் காண