ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து பேசிய பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைகிறது என அவர், நாட்டில் எப்போது பார்த்தாலும் ஒவ்வொரு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவதால் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்று இருப்பதாக தெரிவித்த பிரதமர், இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் தன்னுடைய அறிக்கையை வழங்கி இருப்பதாக கூறினார்.
எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கு அழைக்க தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.