அடேங்கப்பா… நீலகிரியில் இவ்வளவு பறவை இனங்களா இருக்கிறது… இது தெரியாம போச்சே…

நீலகிரி வன பகுதியில் சுமார் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது, பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1886 எண்ணிக்கையிலான பறவைகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022 – 2023ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.

நீர் பறவைகளின் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. இதில் நீலகிரி லாபிங் திரஸ் உள்பட பல்வேறு அரிய வகை பறவை இனங்கள் தென்பட்டன. இந்த நிலையில், நில பறவைகளின் கணக்கெடுப்பு நீலகிரி உட்பட தமிழகம் முழுவதும், ஒரே நாளில் ஒருங்கிணைந்த முறையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்டுள்ளதால், நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்பட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.

அதேபோல், இந்த வனப்பகுதிகளில் உள்ள அணைகள், நீர்நிலைகளில் அரிய வகை பறவைகள், இடம்பெயர்ந்து வரும் பறவைகள், நீலகிரி வாழ் பறவைகளும் காணப்படுகின்றன.

இதில் நீலகிரி வனக்கோட்டத்தில் 25 பல்வேறு வகையான பகுதிகள் கணக்கெடுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் 10 ஊரக பகுதிகளிலும், 15 வனம் சார்ந்த பகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அரசு கலைக்கல்லூரியில், வனவிலங்கு உயிரியல் துறையில் படிக்கும் 40 மாணவ மாணவிகள் மற்றும் வனத்துறையை சார்ந்த 25 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் கலந்து கொண்டனர். இந்த பறவைகள் கணக்கெடுப்பு மூலம், 128 வகையான 5,110 பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1,886 எண்ணிக்கையிலான பறவைகள் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில், அதிகபட்சமாக பறவைகள் கெத்தை பகுதிகளில் தென்பட்டன.

மேலும் நீலகிரியில் அழியும் நிலையில் உள்ள நீலகிரி வுட் பிஜிஎன், நீலகிரி பிப்பெட், நீலகிரி பிளை கேட்சர், நீலகிரி சோலை கிளி மற்றும் நீலகிரி லாபிங் திரஸ் ஆகிய பறவைகளும் தென்பட்டுள்ளன. கணக்கெடுப்பில் பல்வேறு வகையான அரிய பறவையினங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.