India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion


 
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. இச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.  இதில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவேஷ் கான் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவேஷ்கானை நீக்கியது ஏன்?
இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.  எனவே அவேஷ் கான் எங்கு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் முழு முயற்சியுடன் அவர் பயிற்சி எடுத்து பந்து வீசுவதை நான் நேரடியாக பார்த்தேன். இப்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலில் அவேஷ் கான் பெயர் இடம்பெறவில்லை. 
இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெட்ஸில் ஆகாஷ் தீப் பந்துவீசியதால் டீம் மேனேஜ்மென்ட் அவரை மிகவும் விரும்பி உள்ளது.அவர் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் அணியில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது தான். ஆனால் அவேஷ் கான் எந்த தவறும் செய்யவில்லை. இப்படி இருக்கையில் அவருக்கான தகுதியை நிரூபிக்க நியாயமான வாய்ப்புகள் வழங்காமல் கைவிடுவது தேர்வு நடைமுறைகளின் நேர்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது.” என்று பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
தொடர்ந்து பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ரா இருக்கிறார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் நன்றாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அதேநேரம் ராஞ்சியில் நடக்கும் நான்காவது ஆட்டத்தை தவறவிட்டாலும் தர்மசாலாவில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகளை பொறுத்தே இது அமையும்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை – வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் ஓபன் டாக்
 
மேலும் படிக்க: Shreyas Iyer:இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்…காரணம் என்ன?

மேலும் காண

Source link