GSLV-F14: GSLV-F14 விண்கலத்தில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள், வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோவின் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் (ஜிஎஸ்எல்வி) 16வது விண்கலமாகும். இதைமுன்னிட்டு, கடந்த ஜனவரி 25ம் தேதியன்று, செயற்கைக்கோள் சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்சாட்-3டிஎஸ் என்றால் என்ன?
INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய சுற்றுப்பாதையில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவைகளைத் தொடர அனுமதிக்கிறது. INSAT-3DS ஒரு புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, INSAT-3DS ஆனது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோளின் மொத்த நிறையானது 2,275 கிலோகிராம் ஆகும். இதற்கு செயல் வடிவம் வழங்குவதில் இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
இன்சாட்-3டிஎஸ்-ல் உள்ள கருவிகள் என்ன?
INSAT-3DS ஆனது மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் பல அதிநவீன பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் ஆறு சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் தொடர்பு பேலோடுகள் அடங்கும். டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டிஆர்டி) கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஎஸ்&ஆர்) டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு பேலோடுகள் ஆகும்.
தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். செயற்கைக்கோளின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள SAS&R டிரான்ஸ்பாண்டர், பீக்கான் டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னல் அல்லது எச்சரிக்கை கண்டறிதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை எளிதாக்கும்.
ஜிஎஸ்எல்வி எஃப்14 இஸ்ரோவின் 93வது விண்கலமாகும். இந்த ஆண்டு இஸ்ரோ முன்னெடுத்துள்ள இரண்டாவது பணி இதுவாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS அமைப்பு இடம்பெற்று இருந்தது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண