டேட்டிங் ஆப் மூலம் சினிமாக்கார‌ருக்கு நேர்ந்த கதி… சிறுவன் உட்பட 4 பேர் கைது…

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நபர் வீட்டிற்கு சென்ற சினிமா சவுண்ட் இன்ஜினியரை மிரட்டி பணம் பறித்த புகாரில், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கேகே நகர் ராஜ மன்னார் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 56 வயதாகி திருமணமாகாத சுரேஷ், சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

Grindr என்ற டேட்டிங் ஆப் மூலமாக சுரேஷுக்கு ஆண் நபர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த 15ஆம் தேதி சுரேஷை பார்க்க வேண்டும் என வடபழனி கோயில் பின்புறம் வரவழைத்துள்ளார். பின்னர், ஈஸ்ட் மாதா தெருவில் தனது வீடு இருப்பதாக கூறி சுரேஷை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் வீட்டில் பதுங்கி இருந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர், சுரேஷை மிரட்டி கட்டிப் போட்டு மிரட்டியுள்ளனர். 2 நாட்களாக மிரட்டி தாக்கியதோடு, ஜிபே மூலமாக 27 ஆயிரம் ரூபாய் பணம், இரு சக்கர வாகனம், செல்போன் அனைத்தையும் பறித்துள்ளனர்.

மேலும், சுரேஷை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துவிட்டு, வெளியில் சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அனுப்பியுள்ளனர். இதனால், பயத்தில் புகார் அளிக்காமல் சுரேஷ் இருந்துள்ளார்.

இந்நிலையில், இதே போன்ற வேறு ஒரு சம்பவத்தில் வடபழனி போலீசார் சிலரை கைது செய்திருப்பதை அறிந்த சுரேஷ், புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சுரேஷை மிரட்டி தாக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன், வடபழனியை சேர்ந்த இம்ரான், பரத் குமார் மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களுக்கு வலைவீசி வருவதோடு, கைதானவர்களிடம், இதே போல எத்தனை பேரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.