ஒடிசாவுக்கு பதவிகளை அள்ளித்தரும் மத்திய அரசு… வாய் பிளக்கும் தமிழர்கள்…

ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகளை மத்தியில் ஆளும் பாஜக அள்ளித் தருவது தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு, ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு, ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சக்திவாய்ந்த முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதோடு மட்டுமல்லாமல், அங்கு மக்களவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இதனால், மத்திய பாஜக ஆட்சியில் ஒடிசா மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த‍தாக கருதப்படுகிறது. முதல்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஒடிசா மக்கள் ஆதரவு கொடுத்துள்ளதை கவுரவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பதவிகளை பாஜக அள்ளிக் கொடுத்த‍து.

இந்நிலையில், மக்களவை சபாநாயகராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் அனைவரது மனதில் இருந்த‍து. பெரும்பாலும், உத்தரப்பிரதேசம் அல்லது குஜராத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியபோது, பாஜகவுக்கு புதிதாக வாய்ப்பு வழங்கிய ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு முக்கியத்துவம் வழங்க வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பர்துருஹரி மஹதாப் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 18ஆவது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளது.

முதல் இரண்டு நாட்களுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யப்படும். இதற்காக இடைக்கால சபாநாயகராக ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பர்துருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பிஜு ஜனதா தளம் கட்சியில் 1998ஆம் ஆண்டு முதல் கட்ட மக்களவைத் தொகுதியில் கடந்த ஆண்டு வரை எம்.பி.யாக இருந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமாகி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

17ஆவது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரங்களில், மக்களவையை வழிநடத்தும் துணை சபாநாயகர்கள் குழுவிவிலும் இவர் இடம் பெற்று அவையை திறம்பட நடத்தியுள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக மக்களவை உறுப்பினராக இருக்கும் பர்துருஹரி மஹதாப், மிகச்சிறந்த மக்களவை உறுப்பினர் என்ற விருதை, 2017 முதல் 2020 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் வாங்கியுள்ளார். நீண்ட அனுபவம் உள்ளவர் என்பதாலும், ஒடிசாவில் பாஜகவுக்கு மக்கள் அளித்த வாய்ப்புக்கு நன்றி கூறும் வகையிலும், ஒடிசாவை சேர்ந்த பர்துருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருமுறை வாய்ப்பளித்த ஒடிசாவுக்கு இப்படி ஓடி ஓடி பதவிகளை பாஜக கொடுப்பதை பார்த்து, தமிழக பாஜவினர் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, இப்படி ஒரு வாய்ப்பை தமிழக மக்கள் இழந்துவிட்டனரே என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்.