நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது அதன்மூலம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில், 10 ஆவது இடத்திலும், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரக் குறியீட்டில் 9 ஆவது இடத்திலும், நிலையான நகரங்கள் மற்றும் சமூகக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்திக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், நிலத்தில் வாழ்க்கைக் குறியீட்டில் 15 ஆவது இடத்திலும், அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனக் குறியீட்டில், 9 ஆவது இடத்திலும் எனப் பல குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட மிகுந்த பின்னிடவை சந்தித்துள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது என் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குழந்தைகள் காணாமல் போவதும், சுமார் 11% அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், தற்கொலைகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதும், புதிய கண்டுபிடிப்புத் திறன் 37.91% லிருந்து, பாதிக்கும் மேல், 15.69% ஆகக் குறைந்திருப்பதும், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இவை தவிர, உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் குறைந்திருப்பதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மொழித் திறன் மற்றும் கணிதப் பாடத் திறன் குறைந்திருப்பதும், மிகுந்த கவலைக்குரியது என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு, கட்டுப்பாடற்ற மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையே, அடிப்படைக் காரணமாக இருப்பதை மிக எளிதாக உணர முடிகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளாகவும், குறைபாடுகளாகவும் தமிழக பாஜக இதுவரை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிதி ஆயோக் அறிக்கை பிரதிபலித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, வழக்கம் போல் திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடாமல், மாநில நலனை மனதில் கொண்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.