Lok Sabha Election 2024: தமிழக மக்களவை தொகுதிகள் மற்றும் மொத்த வாக்காளர்களின் முழு விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் பாஜகவும் தனிக்கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வியூகங்கள் அமைத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகள் மற்றும் வாக்காளர்கள் தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழக மக்களவை தொகுதிகள்:
தென்னிந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தமாக 39 தொகுதிகள் உள்ளன. இதில் 7 தனி தொகுதிகளாக இருக்க, 32 தொகுதிகள் பொதுதொகுதிகளாக உள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஸ்ரீபெரும்பதூர் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மக்களவை தொகுதியாக உள்ளது. அதேநேரம், மத்திய சென்னை மாநிலத்தின் சிறிய மக்களவை தொகுதியாக உள்ளது.
வாக்காளர்கள் விவரங்கள்:
தமிழ்நாட்டிற்கான திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். , 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப் பட்டுள்ளன. 3.23 லட்சம் வாக்களர்கள் விவரங்களை திருத்தம் செய்துள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034பெண் வாக்காளர்கள்: 3,14,85,724ஆண் வாக்காளர்கள்: 3,03,96,3303ஆம் பாலின வாக்காளர்கள்: 8,294மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,80518-19 வயது வாக்காளர்கள்: 5,26,205
2019ம் ஆண்டு தேர்தல் முடிவு விவரங்கள்:
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கின. அதன் முடிவில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணிக்கு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி வசமாகியது.
வாக்கு சதவிகித விவரம்:
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி. வாக்கு சதவிகிதம் 71.87. இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான 73.82 சதவிகிதத்தை விடக் குறைவாகும். 2014ம் ஆண்டு தேர்தலில் 23.6 சதவிகித வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி, 2019ம் ஆண்டில் பதிவான மொத்த வாக்குகளில் 52.64 சதவிகிதத்தை கைப்பற்றியது. இதில் தி.மு.க மட்டும் பெற்ற வாக்கு சதவிகிதம் 32.76 ஆகும். 2014-ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளில் 44.3 சதவிகிதத்தை கைப்பற்றிய அதிமுக, 2019ம் ஆண்டில் 18.48 சதவிகித வாக்குகள மட்டுமே பெற்றது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 2019ம் ஆண்டு தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 12.76 சதவிகித வாக்குகளை பெற்றது.