புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை அங்காடி தெரு சிந்து காலமானார். அவருக்கு வயது 42.
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து என்கிற கௌரி. இவர் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல், சமூக சேவைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார்.
கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அதே நேரத்தில், கொரோனா காலத்தில், திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அடையாளம் தெரியாத தோற்றத்திற்கு மாறினார். அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில் அதிகாலை 2:30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.