ACTP news

Asian Correspondents Team Publisher

Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது

கடந்த வார இறுதியில் இருந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விவகாரம் என்றால் அது, ரஞ்சிக் கோப்பையில் ஆந்திர அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுதான். இது தொடர்பாக முதலில் பொதுவெளியில் தகவலைப் பகிர்ந்ததும் ஹனுமா விஹாரிதான். இந்நிலையில் அனுமன் விஹாரிக்கு எதிராக ஆந்திரா கிரிக்கெட் அசோசியேசன் தகவல் வெளியிட்டுள்ளது. 
இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஒரு 17 வயது சிறுவனின் பேச்சை கேட்டு தன்ன கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக மிகவும் மன வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ஆந்திர அணிக்காக ஆடிய வீரர்கள் அனைவரும் தங்களது கேப்டனாக மீண்டும் ஹனுமனா விஹாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதினர். 
அந்த கடிதத்தில், “ இந்த கடிதம் ஹனுமான் விஹாரி விவகாரம் தொடர்பானது. ரஞ்சி தொடரில் இடம்பெற்ற வீரர் ஒருவர் விகாரிக்கு எதிராக அவதூறாகவும், கோபமாகவும் பேசியதாக புகார் அளித்துள்ளார். உண்மை என்னவென்றால், அந்த வீரரிடம் ஆக்ரோஷமாக விஹாரி அணுகவில்லை.  அணி சூழலில் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். இது எப்போதும் அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகவே.
எதிர்பாராதவிதமாக அதை அணி வீரரில் ஒருவர் தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டார். இதற்கு அணி வீரர்கள், உதவி பணியாளர்கள் உள்பட அனைவருமே சான்றாகும். எங்களுக்கு விஹாரியே கேப்டனாக தொடர வேண்டும். எங்களுக்கும் அவருக்கும் எந்த சிக்கலும் இல்லை. அவர் எங்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை கொண்டு வருவார். அவரது தலைமைக்கு கீழே அணி சிறப்பாக ஆடியதை பார்த்திருப்பீர்கள். அவரது தலைமையில் 7 முறை தகுதி பெற்றுள்ளோம். இந்த ரஞ்சி தொடரில் நாங்கள் தயாரான நிலையில், பெங்கால் அணிக்கு எதிராக வெற்றி பெற்றோம். ஆந்திர ரஞ்சி அணி வீரர்களாகிய எங்களை விஹாரி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 
இந்நிலையில் இந்த கடிதத்தில் அணியில் உள்ள வீரர்களை மிரட்டி கையெழுத்து போடச் சொன்னதாக ஆந்திர கிரிக்கெட் அசோசியேசன் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை பிசிசிஐக்கு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விஹாரி பயன்படுத்தும் சில வார்த்தைகள் அணி வீரர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. இதுதொடர்பாக வீரர்கள் சையது அலி முஸ்டாக் கிரிக்கெட் தொடரின்போது புகார் அளித்துள்ளனர் எனவும் ஆந்திர கிரிக்கெட் அசோசியேசன் தெரிவித்துள்ளது. 
30 வயதான ஹனுமனா விஹாரி 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதங்கள் 839 ரன்களும், 124 முதல் தர போட்டிகளில் ஆடி 24 சதங்கள், 49 அரைசதங்கள் உள்பட 9 ஆயிரத்து 325 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் 5 சதங்கள், 24 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 506 ரன்களும், 89 டி20 போட்டிகளில் 7 அரைசதங்கள் 1707 ரன்கள் விளாசியுள்ளார்.

Source link