காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகத்திற்கு விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய நீர்வரத்து இல்லாத நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 31 அடியாக குறைந்ததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. ஜூன் 12 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 10 வரை டெல்டா பாசனத்திற்காக 91 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பருவ மழை குறைந்ததால் நிலையில் கர்நாடக அரசு மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காத நிலையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்டா பகுதி விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் இன்று மாலை ஆறு மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும் என 22,774 ஏக்கர் சம்பா பயிர்கள் பாசன நீரை பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. முன்னதாக சம்பா பயிர் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இரண்டு டிஎம்சி வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜனவரி 28 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விடும் என்ற நிலையில் முதல் முறையாக பிப்ரவரி மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது. நீர் இருப்பு 33 டிஎம்சி ஆகும். அணைக்கான நீர் வரத்து 107 கன அடியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
மேலும் காண