இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தகிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் 30/01/2024 அன்று முதல்  சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் 30/12/2023 அன்று  தமிழக  முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப் பேருந்துகளும்    கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன.  பின்னர் 24/1/2024 முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 
இதன் தொடர்ச்சியாக  வரும் 30/01/2024 அன்று முதல் (செவ்வாய்க்கிழமை) இருந்து அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மேலும், 160 பேருந்துகளின் நடைகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.  கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் 30/1/2024  முதல் இயக்கப்பட மாட்டாது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது,  தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட குறிப்பின் படி மக்கள் பயணிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Source link