ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… எதற்காக தெரியுமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5 நாள் பயணமாக டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தார். அவரை நேற்று மாலை திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

மாலை 6.30மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அண்ணாமலை, சுமார் ஒரு மணி நேரம் ஆளுநருடன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து அண்ணாமலை தெரிவித்த‍தாக தெரிகிறது.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டி, ஆளுநரிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி, பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டிருந்த‍து குறிப்பிடத்தக்கது.