ஞானவாபி மசூதியில் இன்று காலை தொல்லியல் துறையினர் ஆய்வு…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறையினர் இன்று காலை ஆய்வை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், இந்திய தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இஇந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி முடிந்த‌து. இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த‌து. அதில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆய்வு அறிக்கையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக, உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்து, மற்ற இடங்களில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இன்று காலை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறையினர் இன்று காலை ஆய்வை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ லிங்கம் தெரிவித்துள்ளார். காலை 7 மணிக்கு இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்க உள்ளனர்.