மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஜெகன் மோகனுக்கு செக்.. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய். எஸ். சர்மிளா நியமனம்

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்தான்.
காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்:
இப்படியிருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, தனி கட்சியை தொடங்கினார். மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆந்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, நடத்தப்பட்ட முதல் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து முதலமைச்சரானார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து அவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா செயல்பட்டு வந்தார். ஆனால், அவர்களுக்கு இடையே பிரச்னை வெடிக்க, தனி கட்சியை தொடங்கி, தெலங்கானா மீது தனது கவனத்தை திருப்பினார் ஒய்.எஸ். சர்மிளா. தெலங்கானாவில் கே.சி.ஆருக்கு எதிராக காங்கிரஸ் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்ததை தொடர்ந்து, தெலங்கானா தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் ஒய்.எஸ். சர்மிளா.
பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்:
இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் ஒய்.எஸ். சர்மிளா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டும் இன்றி அவருக்கு பெரிய பதவி கொடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், ஒய்.எஸ். சர்மிளா, சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜூ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக ஒய்.எஸ். சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், ஆந்திர மாநிலத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ். சர்மிளாவுக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனது சொந்த சகோதரரும் தற்போது ஆந்திர முதலமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகவே அவர் அரசியல் செய்யவிருப்பது காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக பார்க்கப்படுகிறது.
கர்நாடக, தெலங்கானா மாநிலங்களை தொடர்ந்து தெற்கில் தனது செல்வாக்கை மீட்டெடுக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திரம் மாநிலம் மிகப்பெரிய சவாலாக இருக்க போகிறது. ஏன் என்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பல தலைவர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டனர். 
பலவீனமான காங்கிரஸ் கட்சியை மீட்டெடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ். சர்மிளா வெற்றிபெற வைப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
 

Source link