எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், பாஜகவில் இணைந்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு டாடா காண்பித்த அசோக் சவான்:

அந்த வரிசையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவானும் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பவன்குலே, பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.

கிட்டத்தட்டு 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த அசோக் சவான், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, கட்சி பெயரை அசோக் சவான் தவறுதலாக மாற்றி குறிப்பிட்டது பாஜக தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக தலைவர்களை சங்கடப்படுத்திய அசோக் சவான்:

ஆஷிஷ் ஷெலரை மும்பை பாஜக தலைவர் என சொல்வதற்கு பதில் மும்பை காங்கிரஸ் தலைவர் என அசோக் சவான் குறிப்பிட்டார். இதை கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டனர். அருகில் அமர்ந்திருந்த தேவேந்திர பட்னாவிஸ், ‘பாஜக’ என குறிப்பிடும்படி அசோக் சவானை திருத்தம் செய்கிறார். ஆனால், சொல்லிவிட்டு அவரும் சிரித்துவிட்டார்.

பாஜகவில் சேர்ந்ததை தொடர்ந்து பேசிய அசோக் சவான், "நான் இப்போதுதான் (பாஜகவில்) சேர்ந்துள்ளேன். எனவே, வாய் தவறி சொல்லிவிட்டேன். காங்கிரஸில் 38 ஆண்டுகளாக இருந்துவிட்டு, பாஜகவில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்குகிறேன்.

’சப்கா சாத், சப்கா விகாஸ்’ என பிரதமர் மோடி உறுதிமொழி அளித்துள்ளார். சில நேரங்களில், (காங்கிரஸில் இருந்துபோது) நான் அவரை எதிர்க்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நான் எப்போதும் பாசிட்டிவ் அரசியலே செய்து வந்துள்ளேன். நான் பாஜகவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன். நான் எதுவும் கேட்கவில்லை. யாரும் என்னை வெளியேறச் சொல்லவில்லை. இது என்னுடைய முடிவு. காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறுமாறு யாரிடமும் சொல்லவில்லை" என்றார். மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: "சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை" ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள் – தொடரும் பா.ஜ.க. மிஷன்!